இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி என்ற பழமொழியை ஆற்றுநீரில் குளித்துக் கொண்டிருந்த பெரியவர் சிறுவர்களுக்கு கூறுவதை ஆமைக்குட்டி ஆனந்தி கேட்டது.

‘பெரியவர் கூறும் பழமொழிக்கான விளக்கத்தை எப்படியும் கேட்டுவிடுவது’ என மனதிற்குள் தீர்மானித்து ஆற்றின் கரையில் கற்களுக்கு இடையே மறைந்து கொண்டது.

அப்பொழுது சுட்டியான சிறுவன் ஒருவன் “தாத்தா இந்தப் பழமொழி உட்கார்வதையும் நடப்பதையும் வெளிப்படையாக குறிப்பது போல தெரிகிறதல்லவா?.

இதன்படி பார்த்தால் அமர்ந்து வேலை செய்வது இழுக்காகவும் ஓடியாடி வேலை செய்வது பெருமையாகவும் தோன்றுகிறதல்லவா?” என்று கேட்டான்.

அதற்கு பெரியவர் “தம்பி நம் முன்னோர்கள் எவ்விதத்தில் வேலை செய்தாலும், அதில் வேற்றுமை பாராட்டியது இல்லை.

இன்னும் சொல்லப் போனால் உழைப்பவரும், நாடாளும் மன்னரும் சமம் என்றே கருதி வந்தனரே தவிர, யாரையும் தாழ்வாகக் கருதவில்லை.

வள்ளுவப் பெருந்தகை கூட உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என உழவரை பெருமைப்படுத்துகிறார்.

அவர் பிற வேலைகள் செய்பவர்களை கேலி செய்தோ, தரம் குறைத்தோ கூறியதோ இல்லை.

‘மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்’ என்று மூதுரையில் ஒளவையார்கூட எல்லா தொழிலையும் சமமாகவே எடை போடுகிறாறே தவிர, எந்தத் தொழிலையும் தாழ்த்திக் கூறவில்லை.

இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி என்ற பழமொழியானது எப்பொருளை குறிக்கிறது என்பதை சற்று விளக்கிக் கூறுகிறேன்.

 

‘இருந்த கால் மூதேவி’ என்ற சொற்றொடரை நன்கு ஆராய்ந்துப் பார்த்தால் ஒரு உண்மை நமக்கு தெளிவாகப் புரியும்.

வேலை ஏதும் இல்லாமல் இருக்கின்றவர்களுடைய கால்கள், அதாவது சோம்பேறியின் கால்கள் ‘இருந்த கால்கள்’ என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றன.

இதிலிருந்து எந்த ஒரு தொழிலும் இல்லாமல் வெந்ததை தின்று விதி வந்தால் சாகும் மனிதப் பதர்களை கேலி செய்யும் வகையில் தான் இந்த வாக்கியம் உருவாகியுள்ளது என்பது நமக்கு தெளிவாகப் புரிகின்றது.

 

‘நடந்த கால் சீதேவி’ என்ற தொடருக்கு நடக்கின்ற கால்களையுடைய அதாவது உழைத்து வரும் ஊதியத்தை கொண்டு உயிர் வாழும் மனிதர்களின் கால்கள் தான் சீதேவி.

 செல்வத்தின் இருப்பிடம் என்பது பொருள் ஆகும். கோடி கோடி செல்வங்கள் இருந்தாலும் உழைக்காது உண்டு வந்தால் அவை மூதேவியை அழைத்து வந்ததற்கு சமமாக வறுமையைக் கொண்டுவரும்.

எவ்வளவு தான் வறுமை இருந்தாலும் உழைக்க ஆரம்பித்துவிட்டால், அது செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதே இந்தப் பழமொழிக்கான உண்மையான பொருள் ஆகும்.” என்று கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here