School Morning Prayer Activities – 21.12.2018 ( Daily Updates… )

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

உரை:
முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

பழமொழி:

Fact is stronger than fiction

கற்பனையை விட உண்மை விசித்திரமானது

பொன்மொழி:

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய
சுமையாகிவிடும்.

 – பெர்னார்ட்ஷா

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
மால்தஸ்

2) கல்லணையைக் கட்டியவர் யார்?
கரிகால சோழன்

நீதிக்கதை :

பறக்கும் போட்டி

அழகர் மலை காட்டுப் பகுதியில் புறாக்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஜிக், ஜங் என்ற இரண்டு புறாக்கள் நண்பர்களாக இருந்தன. எப்போதும் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்தன. இரண்டும் அங்குள்ள ‘கூக்கு’ பள்ளியில் படித்துவந்தன.

அந்தப் பள்ளியில் வேடன் வந்தால் எப்படித் தப்பிப்பது, காட்டு விலங்குகளுடன் எப்படிப் பழகுவது, காட்டை எப்படிப் பரமாரிப்பது, எந்தப் பருவத்தில் எந்தப் பக்கம் உணவு கிடைக்கும் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.

‘வேடனிடம் தப்பிய புறாக்கள்’, ‘எறும்பும் புறாவும்’ போன்ற கதைகள் அவற்றுக்குப் பாடங்களாக இருந்தன. புறாக்கள் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பறக்கும் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் புறாவே, அடுத்த வருடம் பள்ளியின் தலைவராக இருக்க முடியும்.

போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தது ஜிக்.

“இது என்ன சாதாரணப் போட்டின்னு நினைச்சிட்டியா ஜிக்? பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா?” என்று சிரித்தது மினு.

உடனே மற்ற புறாக்களும் சிரிக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்து ஜிக்கின் முகம் சுருங்கியது.

“ஏய் ஜிக், எதுக்கு இப்படி வருத்தப்படறே? பறப்பது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லை. நீ கலந்துக்கறே. போட்டியில் வென்று தலைவராகா விட்டாலும்கூடப் பரவாயில்லை. கலந்துகொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம்தான் முக்கியமானது. நானும் உன்னுடன் சேர்ந்து பயிற்சிக்கு வரேன். நீ கலந்துக்கறே” என்றது ஜங்.

“பறக்கும் பயிற்சி மட்டுமில்லை, உணவுக் கட்டுப்பாடும் ரொம்ப முக்கியம். நாங்க ஆசிரியர் சொல்வதைச் சாப்பிட்டோம். நீங்க ரெண்டு பேரும் கண்டதையும் தின்று, உடல் பெருத்துப் போயிருக்கீங்க. இதில் போட்டிக்குப் பறப்பதெல்லாம் முடியாத காரியம்” என்று மீண்டும் சிரித்தது மினு.

“நீ எதையும் கண்டுகொள்ளாதே. இன்றே பயிற்சியை ஆரம்பிப்போம்” என்று ஜிக்கை அழைத்துச் சென்றது ஜங்.

பயிற்சியின்போது திடீரென்று கீழே விழுந்தது ஜிக். வேடனின் அம்பு ஒன்று ஜிக்கின் காலைப் பதம் பார்த்துவிட்டது. உடனே அதை மறைவான இடத்தில் படுக்க வைத்து, பச்சிலையைப் பறித்து காயத்துக்கு மருந்திட்டது ஜங்.

இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தது ஜிக். அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை. மூன்றாவது நாள் பயிற்சிக்கு வந்துவிட்டது. சற்றுத் தூரம்கூடப் பறக்க முடியவில்லை.

“நல்லா இருக்கும்போதே உன்னால் முடியாதுன்னு சொன்னேன். இப்ப காயம் வேற. பேசாமல் ஓய்வெடு. அடுத்த வருஷம் போட்டியில் கலந்துக்க” என்றது மினு.

ஜிக் அதைக் கண்டுகொள்ளவில்லை.

அனைவரும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருந்தன. அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. புறாக்கள் மரங்களில் பதுங்கிக்கொண்டன. ஜிக்கும் ஜங்கும் மழையைப் பார்த்ததும் குஷியாகிவிட்டன. இரண்டும் மழையில் நனைந்தப்படி பறந்தன.

சிறிது தூரம் சென்றதும் போட்டி நினைவுக்கு வரவே, “ஜிக், மழையில் பறக்க வேண்டாம். ஏதாவது ஆகிவிடப் போகிறது” என்று குகையில் ஒதுங்கியது ஜங். ஆனால், ஜிக் வெகுநேரம் மழையில் நனைந்துவிட்டு வீடு சென்றது. மறுநாள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் , மாலை ஜிக்கைச் சந்தித்தது ஜங். மழையில் நனைந்ததால் காய்சலில் படுத்திருந்தது ஜிக். இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் சரியானது.

அன்று மாலை ஜிக்கைச் சந்தித்த ஜங், “நாளை மறுநாள் போட்டி. உனக்குக் களைப்பாக இருந்தால் போட்டியிலிருந்து விலகிவிடு. கலந்துகொள்ள நினைத்தால் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். முடிவு உன் கையில்” என்றது.

“என்னால் முடியும்னு தோணுது. நான் போட்டியில் பங்கேற்பேன்” என்றது ஜிக்.

“சரி, வா. கொஞ்ச தூரம் பறக்கலாம்” என்று வெளியில் அழைத்துச் சென்றது ஜங்.

கொஞ்சம் தூரம்கூடப் பறக்க முடியவில்லை. ஜிக்கின் உடல் வலித்தது. அப்படியே ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டது.

“நண்பா, உன்னால் முடியவில்லை என்றால் வேறு எவராலும் முடியாது. இந்த முறை நீதான் வெற்றி பெறப் போகிறாய். இன்னும் கொஞ்சம் பறப்போம்” என்று ஊக்கப்படுத்தியது ஜங்.

நம்பிக்கையோடு பறந்தது ஜிக். மறுநாள் பள்ளிக்குச் சென்றது. சோர்வான உடலைப் பார்த்து தோற்றுவிடும் என்று நினைத்தன சக புறாக்கள். பயிற்சிப் போட்டியில் மூன்றாம் இடம் வந்தது ஜிக்.

“காய்சலில் விழுந்த உன்னால் மூன்றாம் இடம் வர முடிகிறது என்றால், நாளை நடக்கும் போட்டியில் முழு மனதுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய். இப்போதே உன்னை வாழ்த்துகிறேன்” என்றது ஜங்.

ஜிக் மனதில் உற்சாகம் பொங்கியது. மறுநாள் போட்டி தொடங்கியது. வெற்றி பெறும் நம்பிக்கையில் பறக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஜிக்கின் வேகம் குறைந்தது. மற்ற புறாக்கள் வேகமாக அதை முந்திச் சென்றன. அருகே பறந்துவந்த ஜங், உற்சாகம் ஊட்டி வேகத்தை அதிகப்படுத்தியது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு விழா மேடைக்கு முதல் புறாவாக வந்துசேர்ந்தது ஜிக். அனைத்துப் புறாக்களும் ஆச்சரியத்தில் திகைத்தன. ஜிக்தான் அடுத்த பள்ளி தலைவர் என்று அறிவிக்கப்பட்டது.

மினுவும் சக நண்பர்களும் ஜிக்கிடம் மன்னிப்புக் கேட்டன.

இன்றைய செய்தி துளிகள் : 
1) அரையாண்டு தேர்வு விடுமுறையில் நீட் பயிற்சி நடைபெறும் – பள்ளி கல்வித்துறை

2) ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

3) நாட்டிலேயே சிறந்த 10 காவல் நிலைய பட்டியல் வெளியீடு: 8-வதாக பெரியகுளம் காவல் நிலையம் தேர்வு

4) ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

5) ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான தங்க ஷூ விருதை, பார்சிலோனா அணி வீரர் லியோனல் மெஸ்ஸி 5வது முறையாக வென்றுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here