உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும் என்ற பழமொழியைத்தான் நான் இன்று மாலை கூறுவேன் என்று தன் நண்பர்களிடம் பெருமையாகச் சொன்னது தவளைகுட்டி தங்கப்பன்.

அப்போது மயில் மாணிக்கம் “தவளைக்குட்டி தங்கப்பா பழமொழியின் அர்த்தத்தை இப்போது எங்களுக்கு கூறேன்” என்றது.

அதற்கு தவளைக்குட்டி “இப்போதெல்லாம் சொல்ல முடியாது. மாலையில் கூட்டத்தில் எல்லோருக்கும் முன்னால் விளக்கமாகக் கூறுகிறேன்” என்றது. தவளைக்குட்டியின் நண்பர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர்.

மாலையில் வழக்கமாக கூடும் இடத்தில் எல்லோரும் கூடினர். தவளைக்குட்டி தங்கப்பன் எழுந்து “நான் இன்றைக்கு உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும் என்ற பழமொழி மற்றும் அதற்கான விளக்கத்தைக் கூறுகிறேன்.

இந்தப் பழமொழி ஏதோ ஒன்று அறுந்துவிட்டால் உள்ளதை சொல்ல வேண்டும் என்பது போல புரியாத ஒன்றாக இருக்கிறதல்லவா?

மகாபாரதத்தில் “பழம்பொருள் நூல் சருக்கம்” என்ற ஒரு பகுதி உள்ளது. அந்தச் சருக்கத்தில் பகவான் கண்ணன் கூறிய மொழியே இப்பழமொழியாகிவிட்டது.

அமித்திர முனிவர் என்பவருக்கு சொந்தமான ஒரு அபூர்வ நெல்லி மரத்தில் அரிய நெல்லிக்கனி இருந்தது. அதை தனக்கு பறித்துத் தருமாறு பாஞ்சாலி அருச்சுனனிடம் கேட்டாள்.

அருச்சுனன் சிறிதும் சிந்திக்காமல் தன் காண்டீபத்தை எடுத்து அம்பெய்தி அக்கனியை வீழ்த்தி திரௌபதியிடம் கொடுத்தான்.

அமித்திர முனிவரோ அபூர்வ நெல்லி மரத்திலிருந்து ஓராண்டுக்கு ஒரு முறை உருவாகும் இந்த அரிய நெல்லிக் கனியை மட்டுமே உண்டு உயிர் வாழக்கூடியவர்.

கனியைப் பறித்த அருச்சுனன் தன் அண்ணன் தருமனின் காலடியில் கனியை வைத்தான். உண்மையை உணர்ந்த தருமன், “அமித்திர முனிவரின் உணவை தட்டிப் பறித்து விட்டாயே! பசியோடு இருக்கும் அவருடைய சாபத்துக்கு நாம் ஆளாக நேருமே” என்று கூறி அஞ்சினான். இதனைக் கேட்ட நகுலன் கண்ணனை நினைத்தான். கண்ணனும் அங்கு வந்தான்.

“கண்ணா அருச்சுனன் செய்த தவறால் முனிவரின் வசை மொழியை அனுபவிக்க நேரிடுமோ என்ற பயம் உருவாகிறது. இந்த வசை மொழியில் இருந்து தப்ப நீ தான் வழி சொல்ல வேண்டும்” என்று நகுலன் கேட்டான்.

கண்ணபெருமானும் அங்கு நடந்ததை அறிந்து “நீங்கள் அறுவரும் உங்கள் மனதில் உள்ளவற்றை ஒளிக்காமால் சொன்னால் அறுந்த கனி உற்ற இடத்தில் பொருந்தும்” என்றான்.

முதலாவதாக மூத்தவன் தருமன் வந்தான். “தர்மமும் வாய்மையும் வெல்க அதர்மமும் பொய்மையும் ஒழிக” என்றான். நெல்லிக்கனி ஆறில் ஒரு பங்கு உயர்ந்தது.

இரண்டாவதாக பீமன் எழுந்தான் “பிறன்மனை, பிறன் பொருள், எட்டிக்காய். பிறர் வசையுரைத்தல் பெருமையன்று! பிறர் துயர் என் துயர்! இதுவே என் மனக்கருத்து!” என்றான். நெல்லிக்கனி மீண்டும் ஆறில் ஒரு பங்கு உயர்ந்தது.

மூன்றவதாக அருச்சுனன் எழுந்தான் “உயிரை விடவும் மானமே பெரிது!” என்றதும் நெல்லிக்கனி மீண்டும் ஆறில் ஒரு பங்கு உயர்ந்தது.

அடுத்ததாக நகுலன் எழுந்தான் “உயர்குடிப்பிறப்பு, பேரழகு, பெருஞ்செல்வம், நற்செயல் இவற்றையெல்லாம் உடையரேனும் கல்வி அறிவில்லாரை மணமிலா முள் முருங்கை மலரெனவே மதிப்பேன்” என்றான். நெல்லிக்கனி மீண்டும் ஆறில் ஒரு பங்கு உயர்ந்தது.

அடுத்ததாக சகாதேவன் “வாய்மையே தாய், பேரறிவே தந்தை, அறமே உடன் பிறப்பு, அருளே நட்பு, அமைதியே மனைவி, பொறுமையே மைந்தன் இவ்வாறு வரும் அல்லாது வேறு உறவினர் இலர்” எனக் கூறவும் நெல்லிக்கனி மீண்டும் ஆறில் ஒரு பங்கு உயர்ந்தது.

இறுதியாக பாஞ்சாலி எழுந்தாள் “ஐம்புலன்களைப் போல ஐவர் எனக்கு கணவராக இருந்தனர் என்றாலும் இன்று வேறு ஒருவர் எனக்கு கணவராக வர வேண்டும் என என் உள்ளம் விரும்புகிறது” என்று தனது உள்ளப்பாட்டை கூறியதும் அறுந்த கனி ஒட்டிக் கொண்டது.

சபையில் துகிலுரியும் போது தர்மத்தை எண்ணி ஐந்துபேரும் அமைதியாகிவிட என் மனதில் என்ன இருக்கிறது என அறிந்து அதன்படி நடந்துகொள்ளும் ஒரு கணவன் கிடைக்கவில்லையே என அவள் ஏங்கினாள் என்பது அதன் பொருள்.

இவ்வாறாக ஒவ்வொருவரும் உற்றது (உண்மையை) சொல்ல அக்கனி அற்ற இடத்தில் (அறுந்த இடத்தில்) ஒட்டிக் கொண்டது. இந்தக் கதையிலிருந்து தான் “உற்றது சொல்ல அற்றது பொருந்தும்” என்ற பழமொழி உருவானது” என்று தவளைக்குட்டி தங்கப்பன் கூறியது.

உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும் என்ற பழமொழிக்கு உண்மை பேசினால் அறுந்த உறவுகள் மீண்டும் சேரும் என்றும் பொருள் கொள்ளலாம் என்று தவளைக்குட்டி தங்கப்பன் கூறியது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here