தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.,க்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம்?

தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதற்கு, ஜாதி சான்றிதழ் கட்டாயம் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு முடியும் நிலை உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறை, அடுத்தடுத்து வர உள்ளது. அதன் பின், பொது தேர்வு மற்றும் ஆண்டின் இறுதி தேர்வுக்கு, மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது. 

எனவே, புத்தாண்டு விடுமுறை முடிந்ததும், அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகளை முடிக்க, தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. பல பள்ளிகளில் விண்ணப்ப பதிவு பணிகள், இந்த மாத இறுதியில் துவங்குகின்றன. இதில், எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, மெட்ரிக் பள்ளிகளில், பெற்றோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பெற்றோர், தங்களை கவர்ந்த, பிரபலமான பள்ளிகளில், பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என, விரும்புகின்றனர். இந்த ஆண்டு, பெரும்பாலான பள்ளிகளில், ‘ஆன்லைன்’ வழி மாணவர் சேர்க்கை, விண்ணப்ப பதிவு நடக்கிறது. இந்த பதிவுக்கு, மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், மாணவர் பெயரில் ஜாதி சான்றிதழ், புகைப்படம் ஆகியவை தேவைப்படுகின்றன.எனவே, மாணவர் சேர்க்கைக்கு தேவையான, ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் நகல்களை தயாராக வைத்திருக்க, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சில பள்ளிகளில், புதிய மாணவர் சேர்க்கைக்கு, ஆதார் எண்ணும் எடுத்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாதி சான்றிதழ்களை, அரசின், இ – சேவை மையங்கள் வழியாக பெற்றுக் கொள்ளலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here