கீழடியில் 5ம் கட்ட அகழ்வாய்வு பணிகள்.. மத்திய அரசு அனுமதி

சிவகங்கை : கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு நடத்த தமிழக அரசின் தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழடி எனும் கிராமத்தில் தொல்லியல் துறை 2014-ம் ஆண்டு அகழாய்வுப் பணியை துவக்கியது. மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற பணியில் ஆயிரக்கணக்கான தொன்மையான பொருட்கள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடுகள், கற்கோடாரிகள் உள்ளிட்டவை கிடைத்தன.
இதன் காரணமாக கீழடியின் பெருமை உலகம் எங்கும் பரவியது. அதன் தொடர்ச்சியாக இரண்டு மற்றும் 3ம் கட்டமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தமிழர் நாகரிகம் பற்றிய ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன.
இந்த சூழ்நிலையில், தொல்லியல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணா அசாம் மாநிலத்திற்குப் மாற்றப்பட்டார்.
அதன் பின்னர், அகழாய்வு, இந்திய தொல்லியல்துறை அலுவலர் ராமன் என்பவரின் தலைமையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மிக குறைந்த கால அவகாசத்தில் நடைபெற்ற இந்த அகழாய்விலும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.
இதற்கிடையே கீழடி அகழாய்வு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் உத்தரவிட்டிருந்தது. இந்திய தொல்லியல்துறையானது கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள நிதியில்லை என்று கூறியதால், மாநில தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழ்வாய்வை மேற்கொண்டது.
அந்த ஆய்விலும் ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டதால் கீழடியிலேயே கள அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதனையடுத்து, கீழடி அகழாய்வு 4-ம் கட்ட அகழாய்வு நிறைவடையும்போது தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழக அரசு தொடர்ந்து ஆய்வை மேற்கொள்ளும் என்று உறுதியளித்திருந்தார்.
இந் நிலையில், தற்போது மத்திய அரசு, தமிழக தொல்லியல்துறைக்கு கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வைத் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள தமிழக தொல்லியல் துறை நிபுணர்கள், நவீன அறிவியல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here