நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம் என்ற பழமொழியை யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று ஆசிரியர் கூறுவதை புறாக்குஞ்சு புனிதா கேட்டது.

ஆசிரியர் பழமொழியின் விளக்கத்தை பற்றி ஏதேனும் கூறுகிறாரா? என்று எண்ணி தொடர்ந்து அவர் கூறுவதைக் கேட்டகலானது.

அப்பொழுது மாணவன் ஒருவன் எழுந்து “ஐயா, நம்மில் சிலர் “நாய் படாத பாடு” படுவதாக புலம்புவதுண்டு. ஆனால் நரியின் பெயரைக் கொண்ட இந்த பழமொழியை நான் கேட்டதில்லை.

இந்த பழமொழி எதனைக் குறிப்பிடுகிறது இதனுடைய உண்மையான பொருள் என்ன? என்று எங்களுக்கு சொல்லுங்கள் என்று கூறினான்.

ஆசிரியர் “நான் இந்த பழமொழியை ஒரு கதை மூலம் உங்களுக்கு விளக்குகிறேன்.

முன்னொரு சமயம் வேடன் ஒருவன் தினையினைப் பயிர் செய்து அக்காட்டினைப் பாதுகாத்து வந்தான. யானை ஒன்று தினைக் காட்டினுள் புகுந்து அழிக்க ஆரம்பித்தது.

அதனை கொல்ல வேடன் வில்லை வளைத்து அம்பு எய்தான். அம்பு

பாய்ந்த கோபத்தால் யானை சினம் கொண்டு வேடனைத் தாக்கியது.

வேடன் கீழே விழுந்த‌ இடத்தில் புற்று ஒன்று இருந்தது. அதில் இருந்த நாகத்தை வேடன் மிதித்தான்.

நாகம் வேடனை தீண்டியது. நாகம் தீண்டியதை கண்ட வேடன் தன் உடைவாளால் பாம்பை துண்டாக்கினான்.

ஆக நாகத்தின் நஞ்சால் வேடனும் வேடனின் அம்பால் யானையும், வாளால் பாம்பும் இறந்தன.

 

 

இந்நிலையில் அந்த வழியே ஒரு நரி வந்தது. அது இறந்து கிடந்த மூன்றையும் கண்டு மனதிற்குள் ஆனந்தம் கொண்டது.

இந்த யானை எனக்கு 6 மாதங்களுக்கு உணவாகும். இந்த வேடனோ ஒரு மூன்று நான்கு நாட்களுக்குத்தான் சரியாக இருப்பான். பாம்போ நமக்கு ஒரு நாள் உணவு தான்.

இந்த வேளை உணவுக்கு வேறு ஏதாவது கிடைக்குமா என யோசித்தவாறே சுற்றும் முற்றும் பார்த்தது.

வேடனின் கையில் இருந்த வில்லை நரி கண்டது. வில்லில் உள்ள நரம்பைக் கண்டது.

ஆசை மிகுதியால் நரி ‘இந்த ஒரு வேளை உணவுக்கு நரம்பு சரியாக இருக்குமே’ என எண்ணி அந்த நரம்பை கவ்வியது.

வேடன் இறப்பதற்கு முன் வில்லில் ஒரு அம்பை மாட்டி வைத்திருந்தான்.

நரி நரம்பை கவ்வ அம்பு நரியின் வாயுக்குள் சென்றது. உடனே நரியும் அங்கு ஏற்கனவே இறந்த கிடந்த மூவருடன் நான்காவதாக இறந்து வீழ்ந்தது.

 

 

பேராசைப்படும் ஒருவன் அளவுக்கு அதிகமாக பொருட்களை சேர்க்க சேர்க்க அவனது வாழ்வு நரிபோலத்தான் முடியும்.

அதிகமாக ஆசைப்பட்டால் அல்லல் பட நேரும் என்பதையே ‘நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்’ என்ற இந்தப் பழமொழி விளக்குகிறது.” என்று ஆசிரியர் கூறினார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here