இந்திய அரசின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீர் தடை விதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம், மக்கள் தங்கள் இந்தியாவின் உயர்ந்த மதிப்பு கொண்ட நோட்டுகளை வைத்திருக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தி காத்மாண்டு போஸ்ட் நாளேட்டுக்கு நேபாள தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் கோகுல் பிரசாத் பஸ்கோடா அளித்த பேட்டியில், “ நேபாளத்தில் இந்திய அரசின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 
அந்த உயர்ந்த மதிப்புள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும், கையில் வைத்திருக்கவும் வேண்டாம். மாறாக, இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்துக்கு பயன்படுத்தலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆனால், எதற்காக இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாள அரசு திடீரென தடை செய்துள்ளது என்பதற்கான காரணத்தை அவர் கூறமறுத்துவிட்டார். நேபாள அரசின் இந்த முடிவால், இந்தியாவில் பணியாற்றும் நேபாள நாட்டவரும், நேபாளத்துக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தபோது, நேபாளத்தில் கோடிக்கணக்கில் ரூ.500 , ரூ.1000 நோட்டுகள் தேங்கிவிட்டன. அந்த நோட்டுகளை இதுவரை மத்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதால், நேபாள அரசு கடும் அதிருப்தி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. அந்த நோட்டுகளுக்கு மட்டும் தற்போது நேபாள அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here