100 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளில், 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் தாலுகாக்களை உள்ளடக்கி, 200க்கு மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளிகளில், ஆரம்பம் முதல் தமிழ் வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன.சில ஆண்டுகளாக, ஆங்கில வழி கல்விக்காக, பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடியதால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தன. 
சில அரசு பள்ளிகளில், சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டுமே இருந்ததால், அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவக்கி, தரமான கல்வி அளிக்கும் வகையில், பள்ளி தலைமையாசிரியர், பி.டி.ஏ., உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கைக்காக, வீடு, வீடாகச் சென்று ஆங்கில வழி கல்வி துவக்குவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உதவி தொடக்க கல்வி அலுவலர் கார்த்திக் கூறியதாவது:மாவட்டம் முழுவதும், இரண்டு ஆண்டுகளில், 100 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது. தரமான கல்வியின் பிரதிபலிப்பாக, இனி வரும் ஆண்டுகளில், மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here