ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக் கட்டி அழுவாரா என்ற பழமொழியை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து பேசுவதை இருவாட்சி இளங்கதிர் கேட்டது.

அப்போது கூட்டத்தில் இருந்து “இந்தப் பழமொழி ஏதோ ஒரு சிலரை புண்படுத்துவதற்காக கூறப்பட்டுள்ளது போல உள்ளதல்லவா?” ஒருவர் கேட்பதை இருவாட்சி இளங்கதிர் கேட்டது.

இந்த பழமொழி குறித்து ஏதேனும் கிடைக்கிறதா என்று அது மேலும் கூர்ந்து கூட்டத்தினர் பேசுவதை கூர்ந்து கவனிக்கலானது.

அப்போது பெரியவர் “பலரையும் மதித்துப் பழகும் நம் தமிழ் மக்களிடமிருந்து இது போன்ற பழமொழிகள் தோன்றியிருக்க முடியுமா? இப்பழமொழி தோன்றிய விதத்தைப் பற்றிக் கூறுகிறேன்” என்றார்

பழமொழி தோன்றக் காரணமான நிகழ்ச்சி

ஒரு ஊரில் புரோகிதம் செய்யும் அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் ஆற்றங்கரைக்கு காலைக் கடனைக் கழிக்க சென்றார். அவர் செல்லும் போது கையில் செம்பு ஒன்றை கொண்டு சென்றார்.
செம்பில் நீர் எடுத்து சென்று காலைக் கடனை முடித்தார்.

பின்னர் ‘ஆற்றில் குளிக்கச் செல்ல வேண்டுமே! இந்தச் செம்பை என்ன செய்வது?. நாம் குளித்து முடித்து வருவதற்குள் செம்பை யாராவது களவாடிச் சென்றுவிட்டால் என்ன செய்வது?’ என்று பலவாறு யோசித்தார்.

பின் அவர் ‘செம்பை மணலில் புதைத்து மறைத்து வைத்துச் விட்டு மீண்டும் குளித்து முடித்த பின் எடுத்துச் செல்லலாம்’ என தீர்மானம் செய்தார்.

அதன்படியே செம்பை மணலில் புதைத்தார். அடையாளம் தெரிவதற்காக செம்பை புதைத்த இடத்தில் லிங்கம் போன்று மணலைக் குவித்து வைத்து விட்டுச் சென்றார்.

சற்று தூரத்திலிருந்து வந்த ஒருவன் அந்தணர் மணலில் லிங்கம் போன்று செய்ததை கண்டவாறு வந்தான். அவன் ‘அந்தணர் ஏன் மணலில் லிங்கம் செய்தார்?. அந்தணர் செய்வதில் ஏதோ இருக்கிறது!.

இன்று விசேசமான நாளாக இருக்கலாம். இந்த நாளில் மணலில் லிங்கம் செய்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் போலத் தெரிகிறது!’ என எண்ணினான்.

அவன் தனக்கும் புண்ணியம் வேண்டும் என நினைத்தான். உடனே அவனும் மணலில் லிங்கம் செய்து அதை வழிபடவும் செய்தான். இவனைக் கண்டு மற்றொருவன், அவனைக் கண்ட இன்னொருவன் என பலரும் மணலில் லிங்கம் செய்து வழிபடத் தொடங்கினார்.

நமது ஐயரும் குளித்துவிட்டு வந்து தன் செம்பு இருந்த இடத்தைப் பார்த்தார். மணலில், எங்குமே லிங்க மயமாக காட்சியளிக்கக் கண்டார்.

அங்கு ஒருவனிடம் விசாரித்தார். அவன் தான் மற்றவனை பார்த்து செய்வதாகக் கூறினான். இவ்வாறு ஒவ்வொருவராக விசாரித்து முதலில் லிங்கம் செய்து வழிபட்டவனை விசாரிக்கலானார்.

அவனும் “நீரும் ஐயராச்சே உமக்கு எப்படி தெரியாமல் போச்சு?. ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றில் லிங்கம் கட்டிக் கும்பிடுவாரா? ” என அந்தணரிடமே கேட்டான். அவரும் தன்னைத்தானே நொந்து கொண்டே வீடு சென்றாராம்.

அதிலிருந்து தான் சற்று மாறி “ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக்கட்டி அழுவாரா?” என்ற பழமொழி உருவாகி விட்டது.” என்று கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here