காலி பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பும் வரை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் அரசு உத்தரவு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வரை தற்காலிக ஏற்பாடாக தொகுப்பூதியம் அடிப்படையில் கணினி ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2939 அரசு மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 800க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
இப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமிக்கும் நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கியுள்ள நிலையில் கணினி ஆசிரியர்கள் இல்லாமல் அதுதொடர்பான பாடங்களை படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனை தவிர்க்க டிசம்பர் முதல் மார்ச் வரை 4 மாதங்களுக்கு தற்காலிகமாக கணினி ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள ₹2.50 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில் மாதம் ₹7500 தொகுப்பூதியத்தில் கணினி பட்டத்துடன் பி.எட் முடித்த உள்ளூர் இளைஞர்களை கொண்டு தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் காலி பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதற்காக அவசரத்தை கருத்தில் கொண்டு ₹1 கோடியே 83 லட்சத்து 15 ஆயிரத்தை விடுவித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கணினி ஆசிரியர்கள் தற்காலிக நியமனத்தை பொறுத்தவரை இதற்காக தனியாக ஆசிரியர் குழுவை வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்றும், தேர்வு செய்யப்படும் கணினி ஆசிரியர்களுக்கு இது தற்காலிக ஏற்பாடுதான் என்பதையும் தெளிவுபடுத்த  வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் மாநிலம் முழுவதும் வேலூர் மாவட்டத்தில் 55 முதுகலை கணினி பயிற்றுனர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 52 முதுகலை கணினி பயிற்றுனர்கள் உட்பட அடையாளம் காணப்பட்ட 800 முதுகலை கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு விரைவில் நியமனம் முடிந்து கவுன்சிலிங் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here