School Morning Prayer Activities – 11.12.2018 ( Daily Updates… )

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

பழமொழி:

Even homer nods

யானைக்கும் அடி சறுக்கும்

பொன்மொழி:

மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.

– பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை

2) கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
பர்மா

நீதிக்கதை :

ஒற்றைக் கொம்பனும் முதலை வாயனும்

பள்ளி இறுதி படிக்கும் மணி, நீலனைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்தான். ஒரு வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தி, மணி அடித்தான். சத்தம் கேட்டு வெளியே வந்தான் நீலன்.

“என்ன மணி, இவ்வளவு தூரம்?”

“எனக்கு ஒரு உதவி செய்யணும் நீலன். பள்ளிக்கூடத்தில் காடு பற்றி ஒரு பிராஜக்ட் செய்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் காட்டைச் சுற்றிக் காட்டினால், எனக்கு உதவியாக இருக்கும். என்னைக் கூட்டிட்டுப் போறீயா?” என்று கேட்டான் மணி.

“இதெல்லாம் ஒரு உதவியா மணி? தினமும் நான் போற இடம்தானே? காடு பத்தி உனக்கு அதிகம் தெரியாது. அதனால காட்டுக்குள்ள நுழைஞ்சதிலிருந்து என்னோடதான் இருக்கணும். நான் சொல்றபடிதான் நடந்துக்கணும். அதுக்கு ஒத்துக்குறதுன்னா உன்னைக் கூட்டிட்டுப் போறேன்” என்றான் நீலன்.

“எதுக்கு இவ்வளவு பயம் காட்டறே? காட்டுக்குள்ள வீணா ஆபத்தில் சிக்கிக்கக் கூடாதுன்னு எனக்கும் தெரியும் நீலன். உன் சொல்படி கேட்கறேன், வா” என்றான் மணி.

இருவரும் பேசிக்கொண்டே காட்டுக்குள் நுழைந்தனர். ஓரிடத்தில் இரண்டு மரங்கள் ஒன்றாகப் பிணைந்திருந்தன. சற்றுத் தூரத்தில் சுவர் எழுப்பியதுபோல் மரங்கள் நெருக்கமாகவும் வரிசையாகவும் நின்றன. இந்தக் காட்சிகளை எல்லாம் படம் எடுத்துக்கொண்டான் மணி.

அப்போது தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. உஷாரானான் நீலன். “மணி, ஒத்தக் கொம்பன் வர்ற மாதிரி இருக்கு. நாம ரெண்டு பேரும் அந்தப் பாறைக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிடலாம். வேகமா வா” என்று மணியை அழைத்துக்கொண்டு சென்றான் நீலன்.

சில நிமிடங்களில் இரண்டு கொம்புகளுடன் கம்பீரமாக ஒரு யானை அந்தப் பக்கம் நடந்து சென்றது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பாறையை விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

“என்னப்பா, ஒத்தக் கொம்பன்னு சொன்னே, அதுக்கு ரெண்டு தந்தம் இருக்கே?” என்று கேட்டான் மணி.

“நான் சொன்னதுக்கு கொம்பு இருக்கிற ஒத்தை யானைன்னு அர்த்தம். இந்த மாதிரி யானை எப்பவும் கோபமா இருக்கும். மனுசங்களைக் கண்டால் விடாது. இது யானைக் கூட்டத்துல இருந்து விரட்டப்பட்ட யானை” என்று நடந்துகொண்டே சொன்னான் நீலன்.

விதம்விதமான பறவைகள், பறவைகளின் கூடுகள், தேன் கூடு, மான் கூட்டம், குரங்குகள் என்று வரிசையாகப் படம் பிடித்தபடி நடந்தான் மணி.

சிறிது நேரத்துக்குப் பிறகு இருவரும் ஒரு குளத்தை அடைந்தனர்.

“இந்தப் பாறையில் உட்கார்ந்து ஓய்வு எடு மணி. நான் இந்த மரத்தில் ஏறி, உனக்கு ஈச்சம் பழங்களைப் பறித்துப் போடுறேன்” என்று சொல்லிவிட்டு, மரத்தில் ஏறினான் நீலன்.

குளத்தில் தண்ணீர் தெளிவாக இருந்தது. களைப்பில் தாகம் எடுத்தது. மெதுவாகக் குளத்துக்குள் இறங்கினான் மணி. தண்ணீர் குடித்தான். திடீரென்று குளத்தில் குளிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. கைப்பையைப் பாறையில் வைத்துவிட்டுத் திரும்பலாம் என்று நினைத்தபோது, நீலன் கத்தினான்.

  
“மணி, கையில் இருந்த பையை அந்த முதலை வாயில் வீசிட்டு, வேகமா கரையேறு” என்று சொல்லிக்கொண்டே மரத்திலிருந்து குதித்தான் நீலன்.

மணியும் பையைக் கழற்றி முதலையின் வாய் மீது வீசினான். இரை என்று நினைத்த முதலை, பையைக் கவ்வியபடி தண்ணீருக்குள் மூழ்கியது. மணி வேகமாகக் கரையேறினான்.

“நல்லவேளை நீலன், உன்னாலதான் இப்ப உயிரோட இருக்கேன். தண்ணியில நின்ன நானே கவனிக்கல. நீ எப்படிக் கவனிச்சே?” என்று படபடப்புடன் கேட்டான் மணி.

“பாறையிலதானே உன்னை உட்காரச் சொன்னேன். நீ என்கிட்ட சொல்லாமல் குளத்தில் இறங்கிட்டே. அதான் உன்னைக் கவனிச்சிட்டே இருந்தேன். முதலை மெதுவா உன்னை நோக்கி வாயைத் திறந்துகிட்டு வந்தது. உன்னை இறங்கி வந்து காப்பாத்த நேரமில்லை. அதான் பையை வீசச் சொன்னேன்.”

“ரொம்ப நன்றி நீலன். அந்தப் பையில் கொஞ்சம் ரூபாயும் நீ சொன்ன விஷயங்களின் குறிப்புகளும் வச்சிருந்தேன். எல்லாம் போச்சே…”

“போகட்டும் மணி. உயிர் பிழைச்சதே பெரிசு. இந்த ஈச்சம் பழங்களைச் சாப்பிட்டுக்கிட்டே நட” என்று ஈச்ச மரக் குச்சிகளைக் கொடுத்தான் நீலன்.

நீலனின் அனுபவ அறிவை நினைத்து வியந்தபடி, ஈச்சம் பழங்களைச் சுவைத்துக்கொண்டே நடந்தான் மணி.

இன்றைய செய்தி துளிகள் : 
1.அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

2.பள்ளி மாணவர்களுக்கு, ‘ஸ்மார்ட்’ அட்டை : கியூ.ஆர்., கோடுடன் வழங்க, ‘டெண்டர்’ -க்கு அரசு அனுமதி

3.சிறப்பு வகுப்பில் பங்கேற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு1.69கோடி மதிப்பீட்டில் 6 வகை சுண்டல் வழங்க முடிவு.

4.ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்

5.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here