இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம்

இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் சிறுவர்களுக்கு கூறுவதை பனங்காடை பழனி கேட்டது.

பழனி மீனாட்சி கூட்டத்திலிருந்து பழமொழிக்கான விளக்கம் ஏதேனும் கிடைக்குமா என்ற ஆர்வத்தில் கூட்டத்தினரை தொடர்ந்து கவனிக்கலானது.

கூட்டத்தில் இருந்த சிறுமி ஒருத்தி “பாட்டி இந்தப் பழமொழிக்கும் நமக்கும் சம்மந்தமில்லை என்பது போல் தோன்றுகிறதே. கோழியைப் பற்றித் தானே இப்பழமொழி கூறுகிறது. நமக்கும் இப்பழமொழிக்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டாள்.

அதற்கு பாட்டி “நமது நாட்டில்; ஏதேனும் ஓரிடத்தில் அமர்ந்து வெட்டிப் பேச்சு பேசி பொழுதினை கழிக்கும் வகையினர் உண்டு.

இன்றும் கூட கிராமங்களில் எந்த வேலையும் செய்யாத ஒரு கூட்டம் எப்போதும் காணப்படுவது உண்டு. அந்த கூட்டத்தில் உலக அரசியல் முதல் உள்ளுர் விஷயம் வரை அனைத்தும் ஆராயப்படுவதுண்டு.

பக்கத்திலிருக்கும் நகரத்தை பற்றி அறியாத சிலர் அமெரிக்காவை பற்றி புள்ளி விவரத்துடன் பேசுவார்கள். ஆனால், ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால் இவர்களால் நிச்சயமாக முடியாது. இப்படிப்பட்ட நபர்களைப் பற்றித்தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறான் என கூறுவோம்.

இதைப் போலவே ஒரு வேலைக்கும் உதவாத ஒரு சிலர் உள்ளுரில் ஏதேனும் ஒரு இடத்தில் தினந்தோறும் கூடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பர்.

அந்த இடமே அவர்களுக்கு சுகமானதாகவும் மன மகிழ்வை தருவதாகவும் அமையும். வேறு எங்கு செல்ல வேண்டி இருந்தாலும் அந்த இடத்திற்குச் சென்றால் ஒழிய இவர்களால் தூங்க முடியாது. இவர்களுக்காகத்தான் இந்த ‘இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம்’ என்ற பழமொழி தோன்றியது.

கோழிக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டால் அது எங்கு இருக்கிறதோ அந்த இடத்தை விட்டு நகராது அது இருக்கும் இடமே சொர்க்கம் என அது நினைக்குமாம். அது போலவே வேலை செய்ய இயலாதவர்கள் வியாக்கியானம் செய்தே பொழுது போக்குவார்கள்” என்று பாட்டி கூறினார்.

இதனை கேட்ட சிறுவன் ஒருவன் “பாட்டி நீங்கள் கூறிய விளக்கம் நன்றாக இருந்தது.” என்றான்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here