கொடிநாள் தினத்தையொட்டி (டி.ச.7) படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் தாராளமாக நிதி தர வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆளுநர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:- நமது நாட்டின் எல்லைப் பகுதிகளை எதிரிகளிடம் இருந்தும், எல்லைக்குள் ஊடுருவுகின்றவர்களிடம் இருந்தும் காத்திடும் வகையில் முப்படை வீரர்கள் திறமையுடன் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமானது வீரம் செறிந்த படைவீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாது, நாட்டுக்காக பணியாற்றும் படை வீரர்கள், பணி ஓய்வு பெற்றோர் உள்ளிட்டோர் பயன் அடையும் பல புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
இவற்றைச் செயல்படுத்துவதற்கு முக்கியமானவை நிதி ஆதாரங்களாகும். எனவே, முப்படை கொடிநாள் நிதிக்கு ஆர்வமுடன் நிதி அளிக்க வேண்டும். கொடிநாளை ஒட்டி தாராளமாக நிதி வழங்குவதில் தனிநபர் பங்களிப்பில் தமிழகம் எப்போதும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. எனவே, நமது படை வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில், கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டுமென ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வரி கே. பழனிசாமி: தாய் நாட்டுக்காக இன்னுயிரை கொடுக்கும் முப்படை வீரர்களின் நலன் காத்திடவும், அவர்களது குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் தமிழக அரசு பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.
போரில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பலவும் வழங்கப்படுகின்றன. கொடி விற்பனை மூலம் திரப்படும் நிதியானது, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிறப்புமிக்க பணிகள் சீரிய முறையில் தொடர்ந்திடவும், தமிழக மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்தவும், கொடிநாள் நிதிக்கு தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென்று தனது செய்தியில் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here