புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னையில் நாளை மழை தொடங்கும்; வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

மாலத்தீவையொட்டி மீண்டும் காற்றழுத்த சுழற்சி உருவாகி
வருவதால் சென்னை உட்பட வட தமிழக பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது: நாளை டிசம்பர் 3-ம் தேதி மாலத்தீவையொட்டி காற்றழுத்த சுழற்சி உருவாகிறது. இதனால் நாளை மாலை மழை தொடங்கும். இதனால் டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் பரவலாக மழை பெய்யும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்,

தெற்கு ஆந்திராவிலும், வட தமிழகத்திலும் நல்ல மழை பெய்யும். இதுமட்டுமின்றி மேற்கு தொடர்ச்சிமலையொட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் 5, 6ம் தேதிகளில் கனமழை பெய்யும். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வரை மழை இருக்கும். அதேசமயம் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரளவு மழை தான் இருக்கும்.

சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை சரியாக பெய்யவில்லையே என்ற ஏக்கம் பரவலாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை பகுதியில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு மழைக்கு வாய்ப்பில்லையோ என்ற எண்ணம் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு வைத்துள்ள மழைமானியில், அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரையில் பதிவான கணக்குபடி சென்னையில் 634.3 மில்லி மீட்டர் அளவு மழை பெய்து இருக்க வேண்டும்.

ஆனால் 321.1 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டும் தான் மழை பெய்துள்ளது. அதாவது 49 சதவீதம் அளவுக்கு குறைவாக மழை பெய்துள்ளது. இதுபோலவே சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் நிலைமையும் இதுதான். காஞ்சிபுரத்தில் 26 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. அதுபோலவே திருவள்ளூர் மாவட்டத்தில் 38 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது. மழையளவு பற்றாக்குறையாக இருப்பதால் இந்த சீசனில் மழை பெய்யாமல் போகுமோ என்ற அச்சம் பரவலாக உள்ளது.

ஆனால் அவ்வாறு அச்சப்படத் தேவையில்லை. சென்னை மட்டுமின்றி வட தமிழக பகுதிகளை பொறுத்தவரை இந்த சீசனில் பிற்பகுதியில் தான் கூடுதல் மழை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here