அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உறுதி தரவில்லை: ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவில் இன்று போராட்டம் பற்றி முடிவு

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்; அரசு அறிவித்த ஊதிய உயர்வுக்குப் பிறகு வழங்கப்படாமல் இருக்கும் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி 4-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் உள்பட சில சங்கங்களை அழைத்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், செயலாளர் சுவர்ணா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என்று அந்த சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பை தமிழக அரசு நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் டி.ஜெயக்குமார், அரசுச் செயலாளர் சுவர்ணா பங்கேற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அளித்த பேட்டி வருமாறு:-
எங்களது கோரிக்கை தொடர்பாக இந்த பேச்சு வார்த்தையில் ஏதாவது ஒரு உறுதிமொழியை அமைச்சர் தருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் எந்த உறுதிமொழியையும் தரவில்லை. நாங்கள் கூறியதையெல்லாம் முதல்-அமைச்சரிடம் சொல்வதாக தெரிவித்தார். அதன் பின்னர் முடிவைச் சொல்கிறேன் என்றுகூட எங்களிடம் கூறவில்லை. முதல்- அமைச்சரிடம் பேச விரும்புகிறோம் என்று கூறினோம். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் சென்னையில் 1-ந் தேதி (இன்று) ஜாக்டோஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டம் கூடுகிறது. அதில் இந்த பேச்சுவார்த்தை பற்றி பேசி முடிவு எடுக்கப்படும். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை முடியவும் இல்லை, முறியவும் இல்லை. முதல்-அமைச்சர் எங்களை அழைத்துப் பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லாவிட்டால், நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி போராடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here