கரும்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கரும்பில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஏ ஆகியவை காணப்படுகின்றன.

இதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீசு முதலிய தாதுஉப்புக்கள் உள்ளன.

மேலும் இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நீர்ச்சத்து, நார்ச்சத்து, இயற்கை சர்க்கரை ஆகியவைகளும் காணப்படுகின்றன.

 

கரும்பின் மருத்துவப்பண்புகள்

ஆற்றலினை அதிகரிக்க

கோடை காலத்தில் அளவுக்கதிகமான வியர்வையால் நாம் சக்தியை இழப்பதுடன் நீர்இழப்பினையும் சந்திக்கிறோம். அப்போது கரும்பினை உண்ண இதில் உள்ள இயற்கைச் சர்க்கரை நமக்கு உடனடி ஆற்றலினை வழங்குகிறது.

இதில் உள்ள எலக்ட்ரோலைட் கலவைகள் நீர்இழப்பினை சரிசெய்கின்றன. எனவே கோடையில் இயற்கை உணவான கரும்பினை உண்டு உடல்நிலையைப் பாதுகாக்கலாம்.

சருமப்பாதுகாப்பு

கரும்பில் தனித்துவமான ஆல்பா ஹைட்ராக்சி அமிலமான கிளைகோலிக் அமிலம் காணப்படுகிறது. இது தோலினை ஆக்ஸினேற்ற நிகழ்களினால் பாதிப்பு உண்டாகாமல் பாதுகாக்கிறது.

கரும்பினை அடிக்கடி உண்ணும்போது சரும வீக்கம் மற்றும் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் கரும்பானாது சருமசுருக்கம், வயதான தோற்றம், வடுக்கள், காயங்கள் ஆகிவற்றை நீக்கி சருமத்தைப் பொலிவு பெறச் செய்கிறது.

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க

கரும்பில் உள்ள கால்சியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதனால் எலும்பு பாதிப்பினால் உண்டாகும் ஆஸ்டிரோபோரோஸிஸ் நோய் ஏற்படாமல் கரும்பானது நம்மைப் பாதுகாக்கிறது.

தினமும் ஒரு டம்ளர் கரும்புச்சாற்றினை அருந்தி வந்தால் வயதான காலத்திலும் எலும்புகளை நாம் பாதுகாக்கலாம்.

நல்ல செரிமானத்திற்கு

கரும்பில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை அதற்கு காரதன்மை வழங்குகின்றன. எனவே இதனை உண்ணும்போது செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சுரக்கப்பட்டு செரிமானம் நன்கு நடைபெறுகிறது.

கரும்பில் இயற்கையான நார்ச்சத்துகள் அதிகளவு உள்ளன. இவை உணவினை நன்கு செரிக்கத் தூண்டுவதோடு மலமிளக்கியாகவும் செயல்படுகிறன்றன. இதனால் உடலில் உள்ள கழிவுகள் ஒன்று திரட்டப்பட்டு எளிதில் வெளியேற்றப்படுகின்றன. குடல் வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படாமல் கரும்பானது நம்மைப் பாதுகாக்கிறது.

இதய நலத்திற்கு

கரும்பானது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைடுகள் ஆகியவற்றை நீக்குகிறது. நல்ல கொலஸ்ட்ராலின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.

இதனால் வயதோதிகத்தில் ஏற்படும் இயதநோயிலிருந்து கரும்பு நம்மைப் பாதுகாக்கிறது. மேலும் இதில் காணப்படும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து கரும்பானது நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

மனஅழுத்தத்தைக் குறைக்க

கரும்பில் காணப்படும் டிரிப்டோபன், மெக்னீசியம், சில அமினோஅமிலங்கள் ஆகியவை மனஅழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன்களின் சுரப்புகளை சரிசெய்து ஆழ்ந்த தூக்கத்தினை உண்டாக்குகின்றன. எனவே தூக்கமின்மை மற்றும் தடைப்பட்ட தூக்கத்தால் அவதிப்படுபவர்கள் கரும்பினை உண்டு நிவாரணம் பெறலாம்.

சிறுநீரகங்களின் பாதுகாப்பிற்கு

கரும்பில் உள்ள நீர்ச்சத்து மற்றும் காரத்தன்மையானது சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்கள், சிறுநீரகக்கற்கள் உண்டாதல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் சிறுநீரகத்தை கரும்புச்சாறானது சுத்தப்படுத்துதலில் உதவுகிறது. எனவே கரும்பினை உண்டு சிறுநீரகங்களைப் பாதுகாக்கலாம்.

மஞ்சள்காமாலையைப் போக்க

கரும்பில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நோய்தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்து காக்கின்றன. மேலும் இது கல்லீரலை நோய்தொற்றிலிருந்து பாதுகாப்பதோடு பிலிரூபின் அளவினைக் கட்டுக்குள் வைக்கிறது.

மஞ்சள் காமாலையால் பாதிப்படைந்தவர்கள் கரும்புச்சாற்றினை அருந்தும்போது அது எளிதில் செரிமானம் ஆவதோடு பிலிரூபின் அளவினைக் கட்டுக்குள் வைக்கிறது. எனவேதான் கரும்புச்சாறானது மஞ்சள்காமாலைக்கு சிறந்த மருந்தாகும்.

எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு

கரும்பில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனால் கரும்பினை உண்ணும்போது பற்கள் எலும்புகள் வலுவடைகின்றன. மேலும் இதில் உள்ள தாதுஉப்புக்கள் வாய்நாற்றத்தினையும் சரிசெய்கின்றன.

ஃப்ரெயில் காய்ச்சலைக் குணமாக்க

ஃப்ரெயில் காய்ச்சல் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோயாகும். இந்நோயால் புரச்சத்து இழப்பு, வலிப்புநோய்கள் உண்டாகலாம். கரும்புச்சாறானது ஃப்ரெயில் காய்ச்சலுக்கு சிறந்த தீர்வாகும். இது உடலில் புரோடீனை நிலைநிறுத்தி காய்ச்சலைத் தடுக்கிறது.

பளபளக்கும் நகங்களைப் பெற

போதிய ஊட்டச்சத்து இல்லாமல் நகங்கள் அடிக்கடி உடைவதோடு நிறம் மாறிக் காணப்படுவதும் உண்டு. கரும்புசாற்றினை அடிக்கடி அருந்தும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு நகங்களும் நாளடைவில் பளபளக்கத் தொடங்குகின்றன.

 

கரும்பினைப் பற்றிய எச்சரிக்கை

கரும்பினை உண்டவுடன் உடனே தண்ணீர் அருந்தக்கூடாது. ஏனெனில் கரும்பில் உள்ள தாதுஉப்புகள் காரத்தன்மை கொண்டவை. கரும்பினை உண்ணும்போது அவை வாயில் உள்ள எச்சிலுடன் வேதிவினை புரிகிறது.

அந்தசமயம் தண்ணீரை குடிக்கும்போது அதிகச்சூடு ஏற்பட்டு வாயில் புண்கள் ஏற்படுகின்றன. எனவே கரும்பினைத் தின்று பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் அருந்த வேண்டும்.

கரும்பினை வாங்கும் முறை

கரும்பினை வாங்கும்போது அதன் தோகையானது பச்சைநிறத்தில் இருக்க வேண்டும். கையில் கரும்பினைத் தூக்கும்போது கனமானதாகவும், புதியாதகவும் இருக்கவேண்டும்.

வெளிப்புறத்தோலில் வெட்டுக்காயங்கள், பூஞ்சைதொற்றுகள் உள்ளவற்றை தவிர்த்துவிட வேண்டும்.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட, இரும்பு உடலைத் தரும் கரும்பு தின்று வளமான வாழ்வு வாழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here