தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை 1996–ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது.
இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் பெருமளவில் மாசுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ந்தேதி தூத்துக்குடியில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் பலியானது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே மாதம் 28–ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கை ஜூலை மாதம் 30–ந்தேதி விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது.

ஆனால், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு ஆகஸ்டு 9–ந்தேதி அனுமதி அளித்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு மேகாலயா ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

அதன்படி, நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் சூழலியல் விஞ்ஞானிகள் சதீஷ் சி.கர்கோட்டி மற்றும் எச்.டி.வரலட்சுமி ஆகியோர் அடங்கிய மூவர் குழு கடந்த செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைப்பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தது.

தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களையும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களுடைய கருத்துகளையும் இக்குழு கேட்டு அறிந்தது. அக்டோபர் மாதத்தில் சென்னையில் இந்த குழு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டது.

இவை அனைத்தின் அடிப்படையில் இந்தக் குழுவின் அறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் வழக்கு டெல்லியில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் ரகுவேந்திர ரத்தோர், எஸ்.பி.வாங்டி, கே.ராமகிருஷ்ணன், நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கை அடங்கிய ‘சீல்’ வைத்த உறை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் அமர்வில் அனைவர் முன்னிலையிலும் திறக்கப்பட்டது.

 அந்த அறிக்கையின் இறுதிப்பகுதியை தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் வாசித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–

ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளுக்கு நிபுணர் குழு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டது.

பொதுமக்கள், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்கள் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் இந்தக்குழுவின் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைக்க விரும்புகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது. இந்த ஆலை சீல் வைக்கப்படுவதற்கு முன்பு ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க உரிய அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு தமிழக அரசு தரப்பில் நோட்டீஸ் எதுவும் அளிக்கப்படவில்லை.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிராக அமைந்துள்ளது. ஆலையை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் அதற்காக கூறப்பட்டுள்ள காரணங்களின் தன்மை, அத்தனை ஊறு விளைவிக்கும் வகையில் இல்லை. அந்த உத்தரவில் அளிக்கப்பட்டுள்ள காரணங்கள் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு எந்த வகையிலும் உகந்ததாக இல்லை.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், சுற்றுச்சூழல் தொடர்பாக உரிய நிபந்தனைகள், நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை கடைப்பிடிக்க தவறியதாக இருந்தாலும் தமிழக அரசின் உத்தரவில் முன்வைக்கப்பட்டுள்ள எதுவும் இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான நியாயமான காரணங்களாக அமையவில்லை.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் கருதும் பட்சத்தில் காற்று, நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், திடக்கழிவு மேம்பாடு குறித்து இந்தக் குழு வழங்கும் 25 பரிந்துரைகளை நிபந்தனையாக முன்வைத்து அனுமதி வழங்கலாம்.

இவ்வாறு இந்த அறிக்கையின் இறுதிப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், இந்த அறிக்கையின் இறுதிப்பகுதியை வாசித்து முடித்ததும், ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் எழுந்து ஒரு கருத்தை முன்வைத்தார்.

அவர், ‘‘இந்த விவகாரம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே இந்த ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது; எனவே அதனை உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் நாங்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறோம்.

 இந்த ஆலையை மூடுவதற்கு போதுமான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று இப்போது இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்ததும் அதை காரணமாக வைத்து அரசியல் ரீதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரசு வக்கீல் ராகேஷ் சர்மா ஆகியோர் வாதிட்டனர்.

அவர்கள், ‘‘எதிர் தரப்பு வக்கீல் கோர்ட்டில் அரசியல் சொற்பொழிவை ஆற்ற முயற்சிக்கிறார். இது மிகவும் தவறானது. இங்கு ஒரு சிறு பகுதியைத்தான் தீர்ப்பாயத்தின் தலைவர் வாசித்துக் காண்பித்தார். ஆனால் அறிக்கையில் உள்ளதை முழுவதுமாக தெரிந்து கொண்டது போல அவர் கூறுகிறார். தனியாக இவருக்கு இந்த அறிக்கை ஏற்கனவே கிடைத்துள்ளதா என்பதுவும் இப்போது கேள்விக்கு உரிய வி‌ஷயம். இந்த அறிக்கையின் நகல் எங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கை மீது தமிழக அரசு தரப்பில் பதிலை தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கூறினர். அதைத் தொடர்ந்து, நிபுணர் குழு அறிக்கையின் நகலை இரு தரப்புக்கும் வழங்குமாறு தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் உத்தரவிட்டார்.

மேலும், இந்த அறிக்கை தொடர்பாக இரு தரப்பினரும் ஒரு வாரத்தில் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 7–ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here