கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்!

கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்! என்ற பழமொழியை வயதான பெண்மணி ஒருவர் கூறியதை குட்டியானை சுப்பன் தெரு வீதியில் சென்றபோது கேட்டது.

வயதான பெண்மணி தனது மகளுக்கு பழமொழியின் விளக்கத்தைக் கூறுவதை குட்டியானை சுப்பன் கேட்டு மனதில் நிறுத்திக் கொண்டது.

நாமும் எப்படியும் ஏதேனும் பழமொழியை மக்கள் கூறுவதைக் கேட்டு அறிந்து கூட்டத்தில் கூற வேண்டும் என்ற தன்னுடைய ஆசை நிறைவேறப் போவதை அறிந்து குட்டியானை மகிழ்ந்தது.

மாலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு குட்டியானை சுப்பன் வந்தது. அப்போது அங்கு காக்கை கருங்காலனும், தவளைக்குட்டி தங்கப்பனும் இருந்தன.

அவர்களிடம் குட்டியானை “நான் இன்று கடைவீதியில் கைக்கு எட்டிய தூரம் கைலாசம் வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம் என்ற பழமொழியைக் கேட்டேன்” என்றது.

அதனைக் கேட்ட தவளைக்குட்டி தங்கப்பன் “நானும் ஒரு பழமொழியைக் கேட்டு வந்துள்ளேன். இருந்தாலும் நீ இன்றைக்கு உனது பழமொழியைக் கூறு. நான் நாளை எனது பழமொழியைக் கூறுவேன்” என்றது.

காக்கை கரிகாலன் குட்டியானை சுப்பனிடம் “எல்லோரும் வந்தபின்பு நீ கேட்டறிந்த பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் கூறு” என்றது.

குட்டியானை சுப்பன் “சரி தாத்தா அவ்வாறே செய்கிறேன்” என்றது.
மஞ்சள் வெயில் நிறைந்த அந்திவேளையில் எல்லோரும் வழக்கமாக கூடும் இடத்தில் கூடினர்.

கூட்டத்தினரைப் பார்த்து காக்கை கருங்காலன் “என் அருமைக் குழந்தைகளே இன்று நமது குட்டியானை சுப்பன் தான் கேட்டறிந்த பழமொழியைப் பற்றி உங்ளுக்கு கூறுவான். எல்லோரும் கவனமாகக் கேளுங்கள்” என்றது.

குட்டியானை சுப்பன் கூட்டத்தின் முன்னால் வந்தது. பின் கூட்டத்தினரைப் பார்த்து “நான் இன்று கடைத் தெருவிற்கு சென்றிருந்தபோது கைக்கு எட்டிய தூரம் கைலாசம் வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம் என்ற பழமொழியைக் கேட்டேன். அதனைப் பற்றி உங்களுக்கு கூறுகிறேன்.

இந்தப் பழமொழி ஏதோ சுவையான உணவுகளை உண்பதற்காக கூறப்பட்டது போல தெரிகின்றதல்லவா? இதன் உண்மையான பொருள் வேறு.

என்றும் 16 மார்க்கண்டேயனின் கதையையும், கஜேந்திர மோட்சம் என்ற கதையையும் இணைத்தே இப்பழமொழி உருவானது.

மார்கண்டேயனின் உயிரினைப் பறிப்பதற்காக எமதர்மன் மார்கண்டேயனின் மீது பாசக் கயிற்றினை வீசினான்.

மார்கண்டேயனோ சிவபெருமானை கெட்டியாக பிடித்துக் கொண்டான். அதைக் கண்ட எமதர்மராஜனோ சிவனை பிடித்திருக்கும் மார்க்கண்டேயனின் மீது பாசக்கயிறை வீசினான்.

தன்னை கெட்டியாகப் பிடித்திருக்கும் பக்தனின் மீது பாசக்கயிறை வீசிய எமனை சிவபெருமான் தண்டித்தார். அதோடு, மார்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்ற வரத்தையும் வழங்கினார்.

அதாவது மார்கண்டேயனின் கைக்கு எட்டிய தூரத்தில் கைலாசம் (சிவபெருமான் இருப்பிடம்) இருந்தது! என ஒரு பாதி விளக்கமளிக்கிறது.

இதே போல கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்ட போது அந்த யானை தன்னை காப்பாற்ற “ஆதி மூலமே ஆதிமூலமே” என்று கதற ஸ்ரீமன் நாராயணன் விரைந்து வந்து தனது சுதர்சனச் சக்கரத்தை ஏவி முதலையை அழித்து கஜேந்திரனை காப்பாற்றினார்.

கஜேந்திரனின் கதறல் ஒலி எட்டும் தூரத்தில் அதாவது கஜேந்திரனை வாய்க்கு (ஒலிக்கு) எட்டும் தூரத்தில் தான் வைகுண்டம் (விஷ்ணுவின் இருப்பிடம்) இருந்தது! என மறுபாதி விளக்கம். அளிக்கிறது.

அதாவது இறைவனை நாம் வழிபட்டால் நமது துன்பங்களை அவன் போக்குவான் என்பதே இப்பழமொழியின் அர்த்தம் ஆகும்.

எனவே தான் கைக்கு எட்டிய தூரத்தில் கைலாசம் வாய்க்கு எட்டிய தூரத்தில் வைகுண்டம் என்ற பழமொழி வழங்கப்படலாயிற்று” என்று குட்டியானை சுப்பன் கூறியது.

காக்கை கருங்காலன் “உனது பழமொழியும் அதற்கான விளக்கமும் நன்றாக இருந்தது” என்று குட்டியானையைப் பராட்டியது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here