ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது பாதி

ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது பாதி என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூட்டத்தினருக்கு கூறுவதை மைனாக் குஞ்சு மரிக்கொழுந்து கேட்டது.

பழமொழியை கேட்டதும் அதன் விளக்கத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் தொடர்ந்து கூட்டத்தினரைக் கவனிக்கலானது.

கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன் “இந்தப் பழமொழி வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபம் இப்படி போகிறது என்று கூறுவதை போல உள்ளதல்லவா?” என்று கேட்டான்.

அதனைக் கேட்ட மற்றொருவர் “ இதனை விளக்க நான் ஒரு கதை கூறுகிறேன்.” என்றார்.

பால் வியாபாரி ஒருவன் ஆற்று நீரை பாலில் கலந்து விற்பனை செய்து வந்தானாம்.

ஒருநாள் அவன் பாலை விற்பனை செய்து பாலுக்குரியப் பணத்தை வாங்கி வந்து கொண்டிருந்தான்.

அப்போது ஆற்றங்கரையில் இருந்த மரத்தில் வசித்த குரங்கு, அவன் பணப்பையை பிடுங்கி கொண்டு போய் மரத்தில் அமர்ந்தது.

பணப்பையை குரங்கு பிரித்தது. அதனைக் கண்ட வியாபாரி அதிர்ச்சி அடைந்தான். அவன் குரங்கிடம் கெஞ்சிக் கதறி பணத்தைக் கேட்டான்.

அதனைக் கண்ட குரங்கு ஒரு காசை தரையிலும் இன்னொரு காசை தண்ணீரிலும் போட்டது.

தரையில் விழுந்த காசை வியாபாரி எடுத்து எண்ணினான். உண்மையான பாலுக்குரிய காசு சரியாக இருந்தது.

தண்ணீர்குரிய காசு தண்ணீரோடு போய்விட்டது.” என்று கூறிக்கொண்டிருக்கும் போது வெடிசத்தம் கேட்டது.

தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டதால் மைனாவால் தொடர்ந்து கூட்டத்தினர் பேசுவதைக் கேட்க முடியவில்லை.

மாலை நேரம் நெருங்கியதால் மைனாக் குஞ்சு மரிக்கொழுந்து காட்டை நோக்கி பறந்தது.

வட்டப்பாறையில் காக்கை கருங்காலன் எல்லோர் வருகைக்காகவும் காத்திருந்தது.

மைனாக் குஞ்சு மரிக்கொழுந்து “வணக்கம் தாத்தா, நான் இன்றைக்கு பழமொழியை மட்டும் கேட்டேன். அதற்கான விளக்கத்தை பாதி கேட்டுக் கொண்டிருந்தபோது வெடி வெடித்தால் என்னால் முழுவதையும் கேட்க முடியவில்லை.” என்று தான் கேட்ட முழுவதையும் விளக்கமாகக் கூறியது.

அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “கவலைப்படாதே. மைனாக் குஞ்சு மரிக்கொழுந்து. நீ பழமொழியை மட்டும் கூறு. நான் அதற்கான விளக்கத்தை எனக்கு தெரிந்த விதத்தில் கூறுகிறேன்.” என்றது.

எல்லோரும் வட்டபாறையில் கூடியதும் காக்கை கருங்காலன் எழுந்து “என் அருமைக் குழந்தைகளே. இன்றைக்கு மைனாக் குஞ்சு மரிக்கொழுந்து பழமொழியைக் கூறும். நான் அதற்கான விளக்கத்தைக் கூறுகிறேன்.” என்றது.

மைனாக் குஞ்சு மரிக்கொழுந்து எழுந்து “எல்லோருக்கும் வணக்கம். நான் இன்றைக்கு ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது பாதி என்ற பழமொழியைக் கேட்டேன். ” என்றது.

காக்கை கருங்காலன் எழுந்து “நான் ஒரு கதை மூலம் இப்பழமொழியை விளக்குகிறேன்.” என்றது.

அம்பத்தூரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். நிறைய நில புலன்களுடன் ஏராளமான செல்வங்கள் அவனிடம் இருந்தன.

எனினும் யாருக்கும் ஒரு பைசா கூட தருவதற்கு அவன் சம்மதிக்க மாட்டான். அவ்வளவு கருமி அவன்.

ஒரு நாள் ஒரு புலவர் அவனிடம் பாடி பரிசு பெற வந்தார். அவனைப் பற்றி அறியாத அவர் அவனை புகழ்ந்து பாட ஆரம்பித்தார்.

“அம்பத்தூர் வேளாண்மை
ஆனை கட்டும் தாள்
வான முட்டும் போர்”
என முதல் பாதியை பாடி செல்வந்தனின் முகத்தை பார்த்தார் புலவர்.

செல்வந்தனின் வயல் நன்கு விளைந்திருந்தது. ஒரு புறம் வேலையாட்கள் கதிர் அறுத்துக் கொண்டிருந்தனர். எனவே, புலவர் பாடிய பாட்டு பொருத்தமானது என்று வேலையாட்கள் பாராட்டினர்.

ஆனால், செல்வந்தனோ வாயை திறக்காது மௌனம் சாதித்ததோடு வேறு புறம் திரும்பிக் கொண்டான். புலவருக்கு கோபம் வந்தது. உடனே அவர்

“ஆறு கொண்டது பாதி
தூறு கொண்டது பாதி”
என பாடினார்.

அதாவது ஆறு பாதியை கொண்டு போகும் நெல்லின் தூறு பாதியைக் கொண்டு போகும் என்பதே மீதிப் பாடலின் பொருளாகும்.

அதாவது தர்மம் செய்யாத பணக்காரர்களின் பணம் யாருக்கும் பயன்படாமல் வீணாகப் போகும் என்பதே இதன் அர்த்தம் ஆகும்.

இச்சம்பவத்தை கருமிகளுக்கு விளக்கவே இப்பழமொழி உருவாயிற்று.” என்றது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here