பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப் பூ நஞ்சா?

பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா என்ற பழமொழியை முதியவர் ஒருவர் கூறுவதை பச்சோந்தி பாப்பம்மா கேட்டது.

பழமொழியை பற்றி மேலும் ஏதேனும் கூறுகின்றனரா? என்று தொடர்ந்து முதியவர் கூறுவதை கவனிக்கலானது.

பெரியவர் சிறுவர்களிடம் “இந்தப் பழமொழி தோன்றிய விதத்தை பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.

கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் தெனாலிராமன் என்ற விகடகவி இருந்தான். அவன் மிகுந்த புத்திசாலி.

ஒரு சமயம் அரண்மனையில் இருந்த அபூர்வ வகை ரோஜா மலர்கள் தினசரி களவு போயின. ரோஜா மலர்கள் களவு போவதாக அரசரிடம் தோட்டக்காரன் புகார் கொடுத்திருந்தான்.

அப்போது ஒருநாள் அரண்மனை தோட்டத்தில் தெனாலி ராமன் மகன் ரோஜா மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அங்கு வந்த காவலர்களிடம் தெனாலி ராமனின் மகன் மாட்டிக் கொண்டான்.

அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமன் மகனுடன் அவன் பறித்த பூக்களை ஒரு கூடையில் வைத்து வண்டியில் ஏற்றி அரண்மனைக்கு கொண்டு சென்றனர்.

வண்டி செல்லும் வழியில் தெனாலிராமன் வந்தான். காவலர்கள் அவனிடம் நடந்த விபரங்களைக் கூறி வண்டியில் இருந்த மலர் கூடையையும் அவனுக்குக் காட்டினார்கள்.

தெனாலிராமனும் சிரித்துக் கொண்டே “சரி சரி கொண்டு போங்கள்” என கூறிவிட்டு மகனைப் பார்த்தவர் “பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா” எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார்.

தெனாலிராமனின் மகன் யோசித்தான். ஒவ்வொரு பூக்களாக தின்ன ஆரம்பித்தான். வண்டி அரண்மனைக்கு சென்றது. அங்கு தெனாலிராமனும் இருந்தார்.

காவலர்கள் மன்னரிடம் விஷயத்தை கூறினார்கள். அரசரும் திருடனை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்,

திருடனாக தெனாலிராமன் மகனை கண்டதும் அரசர் துணுக்குற்றார். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு இவன் திருடிய மலர்களை கொண்டு வாருங்கள் என்றார்.

காவலர்கள் மலர் கூடையை கொண்டு வந்தார்கள். அவர்கள் கையில் வெறும் கூடைதான் இருந்தது. மலர்கள் தான் தெனாலிராமன் மகனின் வயிற்றுக்குள் அல்லவா இருக்கிறது!

அரசர் அவனை விடுதலை செய்துவிட்டார். அன்றிலிருந்து இந்தப் பழமொழி வழக்கத்தில் மக்களால் பேசபட்டு வரலாயிற்று.” என்று பெரியவர் கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here