ஊதிய முரண்பாட்டினை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அரையாண்டு விடுமுறை தேர்வில் குடும்பத்தோடு உண்ணா விரதம் ..!!

தமிழ்முரசு மாலை நாளிதழ் செய்தி

ஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்:

இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு

Sunday, 25 Nov, 3.21 pm
சென்னை:

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நுங்கபாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் குறித்து அந்த இயக்கத்தின் மாநில செயலாளர் ராபர்ட் கூறியதாவது: தமிழகத்தில் 2009ல் அமல்படுத்தப்பட்ட 6வது ஊதிய குழுவில் புதிதாக, பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன் நியமிக்கப்பட்ட 
ஆசிரியர்களின் ஊதியத்தை விட ரூ.3170 அடிப்படை ஊதியத்தில் குறைவான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. 31.5.2009க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கு ரூ.8.370ம், அதற்கு ஒரு நாள் பின்னர் 1.6.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 என்ற அடிப்படை ஊதியத்தை நியமித்தனர். இந்த ஊதியம் மிகமிக குறைவானது.

குறிப்பாக, இந்த ஊதியம் துப்புரவு பணியாளர்களின் அடிப்படை ஊதியத்திற்கு நிகரானது. இதற்கு முன்பு அமல்படுத்தப்பட்ட எந்த ஊதிய குழுவிலும் இது போன்று ஒரே பதவிக்கு இரு வேறுபட்ட அடிப்படை ஊதியங்கள் நிர்ணயித்தது கிடையாது. நாங்கள், ஆசிரியர் தகுதிதேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று பணியாற்றி வருகிறோம்.
இந்த ஊதிய முரண்பாட்டை களைய சொல்லி 10 ஆண்டுகளாக பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது 8 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினோம். அப்போது, 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட எங்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைவோம் என்று உறுதி அளித்தனர். ஆனால், 7வது ஊதிய குழு அமல்படுத்தப்பட்ட பிறகும்,

ஊதிய முரண்பாடுகள் நீடிக்கிறது. இதை களைய கோரி 7வது ஊதிய குழுவில் நாங்கள் பரிந்துரை செய்தோம். ஆனால், அதை புறக்கணித்து பழைய ஊதியமே வழங்கப்படுகிறது. இந்த முரண்பாடுகள் அறவே நீக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். இது தொடர்பாக கல்வித்துறை சார்பில் அரசுக்கு பரிந்துறை கடிதம் அனுப்பபட்டது. அதன்பிறகு 7 மாதங்களாகியும் இது வரை ஒரு நபர் ஊதிய குழு அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்த ஒரு நபர் குழுவுக்கான காலக்கெடு அக்டோபர் உடன் முடிந்து விட்டது. அதனால், தான் இந்த கோரிக்கையை முன்வைத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறோம். இதை தொடர்ந்து டிசம்பர் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்ததில் தீர்மானித்துள்ளோம். இதன் பிறகு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அரையாண்டு விடுமுறை தேர்வில் குடும்பத்தோடு உண்ணா விரதம் நடத்தவுள்ளோம். அதன் தொடர்ச்சியாக அரசு ஊதிய முரண்பாடுகளை களைந்து உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் 1 யூனிட் ரத்தம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்குவது என்றும், அதன் பிறகு ஆசிரியர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்குவதும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு எங்கள் கோரிக்கை மீது உரிய கவனம் செலுத்தி ஊதிய முரண்பாடுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here