2019-ல் ஐடி துறையில் அதிக வேலைவாய்ப்பு… `இந்தியா ஸ்கில்’ தகவல்!

இந்தியாவில் பல்வேறு களத்தில் வேலைவாய்ப்புகளை அளித்துக்கொண்டே இருப்பதாக மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. ஆனாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கானோர் வேலையின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளைக் காட்டிலும், வரும் 2019-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் என்று, ‘இந்தியா ஸ்கில்ஸ்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் எடுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு `இந்தியா ஸ்கில்ஸ்’ நடத்திய ஆய்வில் `2019-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் 70 சதவிகிதம் அதிகரிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2018-ம் ஆண்டு வழங்கப்பட்டதை விட அதிக வேலைவாய்ப்புகள் அடுத்த ஆண்டு வழங்கப்படும் என்று 20 சதவிகித நிறுவனத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு எண்ணிக்கையின் அளவு 2016-17 ஆண்டைக் காட்டிலும் 2017-18-ல் அதிகரித்துள்ளது. 2016-17-ல் 40.44 சதவிகிதம் இருந்த இந்த எண்ணிக்கை 2017-18-ல் 45.60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல, புதிதாகப் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டில் இருமடங்கு, அதாவது 15 சதவிகிதமாக உயரும் என்று ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டைக் காட்டிலும் புதிதாக 10-15 சதவிகிதம் பேர் பணியமர்த்தப்படுவார்கள். 
2010-11-ல் தொழில்நுட்பத் துறையில் இருந்த வேலைவாய்ப்பு உருவாக்கத்தை விடக் குறைவாக இருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட, இனி வேலைவாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கும். அதில் பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) 22 சதவிகிதமும், தனியார் துறை நிறுவனங்கள் 67 சதவிகிதமும், பொதுத்துறை நிறுவனங்கள் 8 சதவிகிதமும் மற்றத்துறை நிறுவனங்கள் 3 சதவிகிதமும் பங்களிப்பைக் கொடுக்கின்றன. அதில், BPO, KPO & ITES, வங்கி மற்றும் நிதி சேவைகள், சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து, மென்பொருள், வன்பொருள் மற்றும் தகவல் பார்மசி & ஹெல்த்கேர், உற்பத்தித் துறைகள் (FMCG, CD, & இன்ஜினியரிங், ஆட்டோமேஷன்) கோர் (Core) துறை (எண்ணெய் & எரிவாயு, மின்சாரம், எஃகு, கனிமங்கள் முதலியன) நுகர்வோர் பொருட்கள் என்று பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர். வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு சார்ந்த வேலைகளுக்குத்தான் அடுத்த ஆண்டில் அதிக வாய்ப்புகள் இருக்கும்.

2017-ம் ஆண்டில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் 41 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. ஆனால், இது வரும் 2019-ம் ஆண்டில் 46 சதவிகிதமாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் இருந்தன. 2018-ல் பெண்களை விட 7 சதவிகிதம் ஆண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிடும்போது ஒட்டுமொத்த வேலைவாய்ப்புத்திறனிலும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பெங்களூரு, அதனைத் தொடந்து சென்னை, இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, புனே, திருச்சி ஆகிய நகரங்கள் உள்ளன.
தமிழ்நாட்டின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது வேலையின்மைதான். தமிழ் நாட்டில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு, வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கையும் கோடியைத் தாண்டி நீள்கிறது. 2019-ம் ஆண்டில் இந்த நிலை மாறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here