12ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு: பாடத் திட்டம் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடனேயே வேலைவாய்ப்புப் பெறக்கூடிய வகையில் பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
செங்குந்தர் கல்விக் கழகத்தின் பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது. செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்விக் கழகத் தலைவர் ஆர்.எம்.சண்முகவடிவேல் தலைமை வகித்தார். கல்விக் கழகச் செயலாளர் எஸ்.சிவானந்தன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நினைவு வளைவைத் திறந்து வைத்துப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல வரும் கல்வி ஆண்டு முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தனியார் கல்வி நிறுவனங்களை மிஞ்சும் அளவில் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் 4 சீருடைகள் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் சரியாக கற்க முடியவில்லை எனில் யூடியூப் மூலமாக மீண்டும் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஆன்லைன் மூலமாக 26 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 413 தேர்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 3 மாதங்கள்தான் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 8 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சியின் மூலமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 1,000 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் 1.60 லட்சம் பேர் பொறியியல் படித்தவர்களும், அகில இந்திய அளவில் பல லட்சம் பேரும் வேலைஇன்றி உள்ளனர். இந்த நிலையை மாற்றும் வகையில் 12ஆம் வகுப்பு முடித்தாலே வேலை கிடைக்கும் எனும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தமிழக அரசு பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கவுள்ளது என்றார்.
தொடர்ந்து, பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பரிசு வழங்கிப் பேசினார்.
இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செங்குந்தர் கல்விக் கழக நிறுவனர்களின் உருவப் படங்களைத் திறந்துவைத்தார்.
இதையடுத்து, பவள விழா மலரை அமைச்சர்கள் வெளியிட்டனர்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன், சூர்யா கல்லூரித் தலைவர் ஆண்டவர் ராமசாமி, மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், சிவகுமார் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கே.சி.பழனிசாமி, மனோகரன், ஜெகதீஷ், கோவிந்தராஜ், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் என்.மோகன்ராஜ் நன்றி கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here