சுரைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சுரைக்காயில் விட்டமின்கள் ஏ, சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன.

மேலும் இக்காயில் தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், அதிக அளவு பொட்டாசியம், குறைந்தளவு சோடியம் போன்றவை உள்ளன.

இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவுஎரிசக்தி, அதிகஅளவு நார்சத்து ஆகியவை உள்ளன. இக்காயானது 96 சதவீதம் நீர்சத்தினைப் பெற்றுள்ளது.

சுரைக்காயின் மருத்துவப் பண்புகள்

நல்ல செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் நீங்க

சுரைக்காயானது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.

குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இக்காயில் உள்ள நார்சத்து மற்றும் நீர்சத்து மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும் தடைசெய்கின்றது.

ஆரோக்கியமான உடல் எடை குறைப்பிற்கு

சுரைக்காயானது அதிக அளவு நீர்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியையும், உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

இதனால் இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும் கிடைக்கிறது.

எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக் குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.

நோய் எதிர்ப்பாற்றலைப் பெற

சுரைக்காயானது அதிகளவு விட்டமின் சி-யைப் பெற்றுள்ளது. இந்த விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதனால் சளி, இரும்மல் போன்ற நோய்கள் ஏற்படாமல் சுரைக்காய் நம்மைப் பாதுகாக்கிறது. மேலும் விட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி நோயையும் இக்காய் சரிசெய்கிறது.

சிறுநீர் நன்கு கழிக்க

சுரைக்காயானது அதிக அளவு நீர்சத்துடன் கார தன்மையையும் பெற்றுள்ளது. எனவே கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர்இழப்பினை இக்காய் ஈடுசெய்கிறது.

எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதலுக்கு இக்காய் சிறந்த தீர்வாகும். இக்காயினை அரைத்து சாறகாக அருந்த அதில் உள்ள நீர்சத்து சிறுநீரை எரிச்சல் இல்லாமல் நன்கு வெளியேற்றும்.

சுரக்கொடியினை அரைத்து அடிவயிற்றில் பற்றுப்போட சிறுநீர் நன்கு பிரியும். சிறுநீர் வெளியேறுவதில் உள்ள பிரச்சினைக்கு இக்காய் சிறந்த தீர்வாகும்.

உடலினை குளுமையாக வைத்திருக்க

சுரைக்காய் 96 சதவீதம் நீர்ச்சத்தினைப் பெற்றுள்ளது. இதனால் இக்காயினை சாறு எடுத்து அருந்தும்போது கோடைகாலத்தில் ஏற்படும் நீர்இழப்பு சரிசெய்யப்படுவதோடு உடலின் நீர்சத்து சரியான அளவில் நிலைநாட்டப்படுகிறது. எனவே இக்காயின் சாற்றினை அருந்தி உடலினை குளுமையாக வைத்திருக்கலாம்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு

சுரைக்காயில் உள்ள பொட்டசியம் உள்ளிட்ட தேவையான தாதுஉப்புக்கள் இரத்த அழுத்தத்தை சீர்செய்து மாரடைப்பு போன்ற இதயநோய்கள் வராமல் பாதுகாக்கிறது. எனவே உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இக்காய் சிறந்த தீர்வாகும்.

நல்ல தூக்கத்திற்கு

சுரைக்காயில் உள்ள நீர்சத்தானது உடலுக்கு குளுமையை ஏற்படுத்தி மனஅழுத்தத்தையும் குறைக்கிறது. மேலும் சுரைக்காயில் தலைவலி எதிர்ப்பு பொருள் மற்றும் தூக்கத்தை ஏற்படுத்தும் தன்மையும் உள்ளது. இதனால் இக்காயினை உண்ணும்போது நல்ல தூக்கம் ஏற்படுகிறது.

சருமப் பாதுகாப்பு

சுரைக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது. விட்டமின் சி-யானது மோசமான உணவுகட்டுப்பாடு, மாசுபாடு, மனஅழுத்தத்தினால் ஏற்படும் சருமக்கோளாறுகள் ஆகியவற்றை தடை செய்கிறது.

மேலும் விட்டமின் சி-யானது சருமச்சுருக்கங்கள், சருமம் உலர்ந்து போதல் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கல்லீரல் பாதுகாப்பிற்கு

சுரைக்காயில் உள்ள துத்தநாகம் கல்லீரலில் தொற்றுநோய் ஏற்படாமலும், நோயால் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கிறது. உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச துத்தநாகம் துணைபுரிகிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் துத்தநாகம் உதவுகிறது.

சுரைக்காயினைப் பற்றிய எச்சரிக்கை

சுரைக்காயிலிருந்து சாறு தயாரிக்கும் முன்பு சுரைக்காயின் சிறிதளவை எடுத்து சுவைத்துப் பார்த்து பின் சாறு தயாரிக்கவும்.

கசப்பு சுரைக்காயின் சாற்றினை அருந்தும்போது வயிறுவலி, வாந்தி போன்றவை ஏற்படும். சிலநேரங்களில் உயிரிழப்புகூட நிகழலாம்.

சுரைக்காய் சாற்றினை அருந்தும்போது தனியாக மட்டும் அருந்த வேண்டும். அதனுடன் வேறு எந்த சாற்றினையும் சேர்த்து அருந்தக் கூடாது.

சுரைக்காயினை வாங்கும் முறை

சுரைக்காயினை வாங்கும்போது மேல்தோலை நகத்தினால் கீறினால் மேல்தோல் எளிதாக வரவேண்டும்.

இக்காயனது இளம்பச்சை வண்ணத்தில் இளமையானதாக அளவில் பொதுவானதாக இருக்க வேண்டும். அளவில் பெரிதான முற்றிய மஞ்சள் வண்ணத்தில் உள்ள காய்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

மேற்புறத்தில் வெட்டுக்காயங்களுடன், சீரான நிறமற்ற காய்களைத் தவிர்த்து விடவும். சுரைக்காயின் காம்பினை வைத்து அதன் இளமைத்தன்மையைக் கண்டறியலாம்.

இக்காயினை அறையின் வெப்பநிலையில் மூன்று, நான்கு நாட்கள் வைத்திருந்து உபயோகிக்கலாம்.

குளிர்பதனப் பெட்டியில்இக்காயின் நீர்சத்து குறையாமல் ஒருவாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

சுரைக்காய் அல்வா, இனிப்புகள், பழச்சாறுகள், ஊறுகாய்கள், சூப்புகள், சாறுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றது. சாம்பார், பொரியல் உள்ளிட்ட சமையல்களிலும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.

குறைவான விலையில் அதிக சத்துக்கள் கொண்ட சுரைக்காயினை உணவில் சேர்த்து நலம் பெறுவோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here