பட்டர் பீன்ஸில் உள்ள சத்துக்கள்

பட்டர் பீன்ஸில் விட்டமின் பி1(தயாமின்), பி6(பைரிடாக்ஸின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி2(ரிபோஃப்ளேவின்), போலேட்டுகள் ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. விட்டமின் இ,கே, பி3(நியாசின்) போன்றவையும் உள்ளன.

தாதுஉப்புக்களான தாமிர சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை அதிகளவு காணப்படுகின்றன.

மேலும் இதில் செலீனியம், கால்சியம் ஆகியவையும் உள்ளன. இக்காயில் கார்போஹைட்ரேட், புரோடீன், நார்சத்து ஆகியவை அதிகளவு உள்ளன. குறைந்த எரிசக்தியையும் இக்காய் கொண்டுள்ளது.

 

பட்டர் பீன்ஸின் மருத்துவப் பயன்கள்

இதய நலத்திற்கு

பட்டர் பீன்ஸில் உள்ள நார்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. இக்காயில் உள்ள அதிகப்படியான மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது.

இக்காயில் உள்ள பொட்டாசியம் இரத்தநாளங்களை தளர்வுறச் செய்து இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடை செய்யப்படுகிறது.

இதய நோயினை உண்டாக்கக்கூடிய ஹோமோசைஸ்டீன் அளவினை இக்காயில் உள்ள ஃபோலேட்டுகள் குறைக்கின்றன. இவ்வாறாக இதய நோய் ஏற்படாமல் இக்காயில் உள்ள ஊட்டசத்துகள் நம்மைப் பாதுகாக்கின்றன.

 

ஆற்றலினை அதிகரிக்க

பட்டர் பீன்ஸில் புரோடீன் அளவு அதிகமாக உள்ளது. இக்காயில் உள்ள புரோடீனானது எளிதில் ஆற்றலாக மாற்றும் வகையில் உள்ளது.

இக்காயினை உண்ணும்போது நமது பகுத்தறியும் திறன் மற்றும் கவனத்திற்கு தேவையான ஆற்றல் உடனடியாக கிடைக்கப் பெறுகிறது.

இக்காயில் உள்ள மெக்னீசியமானது உடலின் ஆற்றல் உற்பத்தி செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது.

இக்காயில் உள்ள இரும்புச் சத்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்கி ஆற்றலின் அளவினை அதிகரிக்கிறது. எனவே இக்காயினை உண்டு அதிக ஆற்றலைப் பெறலாம்.

 

நாள்பட்ட நோய்களுக்கு

பட்டர் பீன்ஜில் உள்ள மாங்கனீசு உடலில் முக்கிய பொருளின் இணைப்பிற்கான என்சைமாகச் செயல்படுகிறது. இக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்கிறது.

மேலும் இந்த ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து நாள்பட்ட நோய்களான புற்றுநோய், கண்அழற்சி நோய் உள்ளிட்டவைகளை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே பட்டர் பீன்ஸினை உண்டு நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தலாம்.

 

நல்ல செரிமானத்திற்கு

இக்காயில் உள்ள நார்சத்தானது உணவினை நன்கு செரிக்க செய்ய உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை ஒன்று சேர்த்து நச்சுக்கழிவாக வெளியேற்றுகிறது.

மேலும் குடலானது உணவில் உள்ள ஊட்டசத்தை உறிஞ்ச இக்காயின் நார்ச்சத்து உதவுகிறது. எனவே இக்காயினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறுவதோடு மலச்சிக்கலையும் தீர்க்கலாம்.

 

அனீமியாவை குணப்படுத்த

இக்காயில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இந்த இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

சிவப்பணுக்களின் எண்ணிக்கையின் காரணமாக அதிகளவு ஆக்ஸிஜன் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஆக்ஸிஜன் அதிகம் உள்ள இரத்தத்தால் உடலின் நோய்கள் மற்றும் காயங்கள் விரைந்து குணம் பெறுகின்றன. இரத்த சிவப்பணுக்களின் குறைவின் காரணமாக ஏற்படும் அனீமியா நோயினால் இக்காயினை உண்டு குணப்படுத்தலாம்.

அனீமியாவால் ஏற்படும் சோர்வு, தலைவலி, மயக்கம் போன்றவற்றிற்கு இக்காய் அருமருந்தாகும்.

 

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு

பட்டர் பீன்ஸில் அதிகஅளவு புரோடீன் காணப்படுகிறது. ஒரு கப் பட்டர் பீன்ஸ் ஒரு நாளைய புரோடீன் தேவையில் 1/3 பங்கினை பூர்த்தி செய்கிறது.

புரோடீன் உடல் உறுப்புக்களின் உருவாக்கம், எலும்புகளின் பலம், மூளைச் செல்கள் உருவாக்கம், உடலின் ஆற்றல் ஆகியவற்றிற்கு மிகவும் அவசியமானது.

சைவ உணவினை உண்பவர்கள் இக்காயினை உண்டு ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு மற்றும் உடல் காயங்கள் ஆறத் தேவையான புரோடீனைப் பெறலாம்.

 

பட்டர் பீன்ஸினைப் பற்றிய எச்சரிக்கை

பட்டர் பீன்ஸினை பச்சையாக உண்ணும்போது வாந்தி, வயிற்றுப்போக்கினை உருவாக்குகிறது. இக்காயில் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளதால் இதனை சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதையில் பிரச்சினை உள்ளவர்கள் இக்காயினை தவிர்ப்பது நலம். இக்காயினை உண்ணும்போது அதிகளவு நீரினை அருந்துவது நலம்.

 

பட்டர் பீன்ஸினை வாங்கும் முறை

பட்டர் பீன்ஸினை வாங்கும்போது காயானது புதிதாக, விதைகள் திரட்சியாக, மேல்தோல் ஒரே சீரான நிறத்துடன் இருக்குமாறு பார்த்து வாங்கவும்.

சுருங்கிய, மேல் தோல் கறுத்த காய்களை தவிர்த்து விடவும்.

பட்டர் பீன்ஸை குளிர்பதனப் பெட்டியில் டப்பாவில் போட்டு மூடி வைத்திருந்து பயன்படுத்தலாம். பட்டர் பீன்ஸ் சூப், சாலட் போன்றவற்றிற்காகவும், சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here