அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்

நரி நல்ல தம்பி தான் கேட்ட பழமொழியான அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பதை முதலில் சொல்லி விட வேண்டும் என்று எண்ணியவாறு கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கிச் சென்றது. 

கூட்டத்தில் கூடியிருந்த அனைவரையும் பார்த்து காகம் கருங்காலன் பேசியது.

“நீங்கள் ஒவ்வொருவராக இங்கே எழுந்து நின்று பேச வேண்டும்.  யாரை நான் பேச அழைக்கிறனோ அவர்கள் மட்டும் தான் பேச வேண்டும்.  மற்றவர்கள் அவர் கூறுவதை கவனமாக கேட்டு பின்னர் தமது கருத்துக்களை கூறலாம்.  இது தான் விதிமுறை”

அனைவரும் தலைகளை ஆட்டியபடி ஆமோதித்தனர்.

“சரி ஒவ்வொருவராக சொல்லுங்கள். முதலில் நரி நல்ல தம்பி சொல்லட்டும்” என்று காகம் அமரலானது.  நரி நல்ல தம்பி எழுந்து தான் கேட்ட பழமொழியை கூறியது.

“கருங்காலன் தாத்தாவே நான் கேட்ட பழமொழி அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பது ஆகும்.

இறைவனின் திருவடி உதவுவதை போல உடன் பிறந்தவர்கள் கூட உதவமாட்டார்கள் என பொருள் கொள்ள வேண்டும்.

அதாவது அடி என்பதற்கு “திருவடி” எனபொருள் கொள்ள வேண்டும்.  வேறு விதமாக கூறுவதானால் இராமாயணத்தில் ஒரு காட்சியால்தான் இப்பழமொழி உருவானது.

அதாவது ராமன் காடாள வேண்டும் பரதன் நாடாள வேண்டும் என தசரதனிடம் கைகேயி வரம் கேட்டாள். அதன் விளைவாக ராமன் காட்டுக்கு புறப்பட்டான்.

ராமன் காடேறிய செய்தி அறிந்த பரதனோ முடிசூட மறுத்துவிட்டான். இராமனை நாட்டுக்கு வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு பரதன் கூறினான்.

ராமன் காட்டை விட்டு நாட்டுக்குள் வரபிடிவாதமாக மறுத்து விட்டான். பரதனும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க‌ மாட்டேன் என பிடிவாதமாக இருந்தான்.

பின் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாகவும் ஆட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதமாகவும் இராமனின் காலணியை பரதன் சிம்மாசனத்தில் வைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.

இந்தச் செயலின் மூலமாக அண்ணன் தம்பி இருவரை விட அடி (காலணி) நாட்டுக்கு உதவியது என்ற பொருள்படும்படி “அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்” என்ற பழமொழி உருவானது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here