நடப்பது எல்லாம் நன்மைக்கே

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை ஒட்டகச்சிவிங்கிக்குட்டி ஒப்பிலான் கேட்டது.

‘பழமொழிக்கான விளக்கம் ஏதேனும் கிடைக்கிறதா’ என்று ஆர்வ மிகுதியால் பெரியவர் கூறுவதை ஒட்டகச்சிவிங்கிக்குட்டி ஒப்பிலான் கூர்ந்து கேட்கலானது.

கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர்  “எல்லாமே நன்மைக்கு என்றால் அன்றாடம் ஒரு வேளை உணவுக்கு பாடாய்படும் ஏழைக்கு இந்தப் பழமொழி எவ்வாறு பொருந்தும்?.

நம்முடைய வாழ்வில் இன்பமும் துன்பமும் சகஜம்தான். என்றாலும், துன்பம் வரும்போது நம்மில் எத்தனை பேரால் அதனைத் தாங்கிக் கொள்ள முடிகிறது?

அவ்வாறு துன்பப்படும் சமயத்தில் ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ எனக்கூறிக் கொண்டு அமைதியாக இருக்கத்தான் முடியுமா?.” என்று கேட்டார்.

அதற்கு பெரியவர் “இவ்விதமாக சிந்தனை செய்தால், மேற்கண்ட பழமொழி எதை நமக்கு உணர்த்துகிறது என ஆராய வேண்டியக் கட்டாயம் நமக்கு ஏற்படுகிறதல்லவா?.

சரி இந்த பழமொழி வழக்கத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

பெரியவர் சொன்ன கதை

ஒரு ஊரில் ஒரு மன்னர் இருந்தாராம். அவருக்கு மதியூகியான மந்திரி ஒருவர் இருந்தாராம். அந்த மந்திரியார் எப்பொழுதும் “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று கூறிக் கொண்டே இருப்பாராம்.

ஒரு நாள் மன்னர் பழங்களை நறுக்கும் போது அவரது விரலில் சிறு பகுதியை கத்தியினால் நறுக்கிக் கொண்டாராம்.  இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த அமைச்சர் மன்னரிடம் ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே!’ என்றாராம்.

மந்திரியின் பேச்சைக் கேட்டதும் எப்போதும் போல, மன்னருக்கு ஆத்திரம் வந்தது. ‘நாம் கையில் காயம்பட்டு சிறு பகுதியை இழந்து ஊனமாகி நிற்கிறோம். இதைக் கண்டு அனுதாபம் தெரிவிக்க வேண்டிய அமைச்சரான இவன் நன்மைக்கு என்றல்லவா கூறுகிறான்’ என எண்ணினார்.

உடனே கோபத்துடன் தனது மந்திரியைக் கண்டு “நீர் இது நன்மைக்குத்தான் என நிருபிக்கின்ற வரையில் சிறையில் இரும்” எனக் கூறினான் மன்னன்.

பின் அங்கிருந்த காவலர்களை அழைத்து “இவரைச் சிறையில் அடையுங்கள்” எனக் கட்டளையிட்டான். “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என மீண்டும் கூறியவாறு அவர் சிறை சென்றார்.

இது நடந்த சில நாட்களுக்கு பின் மன்னர் வேட்டைக்குச் சென்றார். காட்டில் தனது பரிவாரங்களைப் பிரிந்து வேறு பாதையில் சென்ற மன்னர் அங்கிருந்த ஆதிவாசிகளிடம் மாட்டிக் கொண்டார்.

அவர்கள் மனித மாமிசம் தின்னும் பழக்கமுள்ளவர்கள். அவர்களுடைய தேவதைக்கு மன்னரை பலி கொடுக்க வேண்டுமென கருதி அவர்கள் மன்னரை கட்டிப் போட்டனர்.

பின்னர் அவரை பலி பீடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருந்த காட்டுவாசிகளின் தலைவர் அரசரின் காயம் பட்ட விரலைக் கண்டவுடன் மன்னரை விடுதலை செய்யச் சொன்னான்.

குறையுள்ள மனிதனை பலி கொடுப்பது தவறு என்பது அவர்களது மரபாக இருந்த படியால் மன்னர் விடுவிக்கப்பட்டார்.
அங்கிருந்து தப்பிவந்த மன்னர் நேராக அரசவைக்கு வந்து சிறையில் இருந்த மந்திரியை அழைத்து வரச் செய்தார்.

மந்திரியிடம் நடந்ததைக் கூறி “என் விரலில் ஊனம் இல்லாது இருந்தால், நான் இப்போது ஆதிவாசிகளுக்கு இரையாகியிருப்பேன். எனவே நீர் கூறியபடி அது நன்மைக்குத்தான் என புரிந்து கொண்டேன்.
உம்மை சிறையில் அடைத்த போது அதுவும் நன்மைக்கே என கூறிச் சென்றீரே அது எப்படி?” என்று அமைச்சரிடம் கேட்டாராம்.

“ஆம் மன்னா தாங்கள் என்னை சிறையில் அடைக்காது இருந்தால் நானும் வேட்டைக்கு வந்திருப்பேன். ஆதிவாசிகள் என்னை பலியிட்டிருப்பார்கள் அல்லவா?” என மந்திரி விளக்கமளித்தாராம்.

அன்றிலிருந்து ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்ற இந்தப் பழமொழி மக்களால் பேசப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here