மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல என்ற பழமொழியை கங்காருக்குட்டி கவிதா புற்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கேட்டது.

புதருக்கு அருகே புற்களைச் சேகரிக்கும் பெண்மணி இப்பழமொழியைக் கூறி தன்குழந்தையைப் பார்த்து கூறுவதைப் புரிந்து கொண்டது கங்காருக்குட்டி கவிதா.

பழமொழி பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என்ற ஆர்வமிகுதியால் அவர்களை மேலும் கவனிக்கலானது.

அப்போது குழந்தைகளில் சிறுவன் ஒருவன் “அம்மா இந்தப் பழமொழி சம்மந்தமில்லாத ஒரு கருத்தை நமக்கு கூறுவதாக உள்ளது அல்லவா?. மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்?. இப்பழமொழி பற்றி சற்று விளக்குங்கள்” என்று கூறினான்.

அதற்கு அப்பெண்ணும் “சரி எனக்கு தெரிந்த இப்பழமொழிக்கான கதையைக் கூறுகிறேன் கேளுங்கள்” என்று கூறத் தொடங்கினாள்.

பழமொழிக்கான கதை

முன்பு ஒரு அரசன் இருந்தானாம். அவனுக்கு எதை யாரிடம் கேட்க வேண்டும் என்ற வித்தியாசம் தெரியாது. ஒருசமயம் அந்த அரசனுக்கு முழங்காலில் வலி உண்டானது.அரசருக்கு வைத்தியம் செய்ய அரண்மனை வைத்தியர் உடனடியாக வரவழைக்கப்பட்டார்.

அரண்மனைக்கு வந்த வைத்தியரும் “பொடுதலையை வச்சுக் கட்டுனா வலி சரியாப் போகும்” எனக்கூறிவிட்டு அதைக் கொண்டுவர‌ச் சென்றுவிட்டார்.

அரசருக்கு வைத்தியர் வரும் வரைக்கும் வலி தாங்க முடியவில்லை. அதனால் அங்குவந்த அரைகுறை பண்டிதனை அழைத்து “வைத்தியர் சொன்னபடி பொடுதலை வைத்துக் கட்ட என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார்.

அந்தப் பண்டிதனுக்கு தமிழே அரைகுறை, வைத்தியம் ஒன்றுமே தெரியாது. ‘பொடுதலை’ என்றவுடன் தனது கையில் இருந்த அகராதியை பிரித்து பொடுதலைக்கு பொருள் அறியலானார். “மன்னா! பொடுதலை என்றால் முடியில்லாத தலை!எனக்குறிப்பிட்டுள்ளது!” எனக் கூறினார்.

வலிபொறுக்க முடியாத அரசரும் காவலர்களை அழைத்து “யாராவது தலையில் முடியில்லாமல் சென்றால் உடனே பிடித்துக் கொண்டுவாருங்கள்!” எனக் கட்டளையிட்டான்.

அரசனின் காவலர்களும் சாலையில் சுற்றும்முற்றும் பார்த்தனர். அப்போது ஒரு மொட்டைத்தலையன் அவ்வழியாக சென்றான். காவலர்கள் அவனை பிடித்துச் சென்று அரசனின் முன் நிறுத்தினர்.

அரசரும் “உடனே நம் வைத்தியர் சொன்னது போல செய்யுங்கள்!” என ஆணையிட்டார்.

வந்திருந்த மொட்டைத்தலை ஆசாமிக்கு எதுவுமே விளங்கவில்லை. “உம் சீக்கிரம் இவன் தலையை எடுத்துக் கொண்டு வாருங்கள்!” என அரசர் மீண்டும் கோபமாகக் கூறிக்கொண்டிருக்கும்போதே அரண்மனை வைத்தியர் மருந்துடன் வந்து விட்டார்.

அரசனின் காலுக்கு மருந்தை கட்டிவிட்டு “மன்னா எதற்காக இவரது தலையை எடுக்க வேண்டும் எனக்கூறுகிறீர்கள்!” என்று கேட்டார்.

“நீர்தானே பொடுதலையை வச்சுக்கட்டினால் வலி போய்விடும் எனக்கூறுனீர், நம் பண்டிதரிடம் பொடுதலை என்றால் என்ன? எனக்கேட்டேன்.

அவர்தான் பொடுதலை என்றால் முடியில்லாத தலை என்று கூறினார். எனவேதான் அவரது தலையை வைத்துக் கட்டுவதற்காக தலையை வெட்டச் சொன்னேன்” எனக்கூறினார்.

வைத்தியர், பொடுதலை என்பது ஒரு இலை என விளக்கமளித்தார்.

இதைக் கண்ட மொட்டைத் தலையனோ “ஐயா நல்லவேளை நான் தப்பினேன்; நீங்கள் பொடுதலையை நசுக்கி கட்டச் சொல்லவில்லை. அதனால்தான் என் தலை தப்பியது” என கூறிவிட்டு ஓட்டம் பிடித்தான்.

அதிலிருந்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே என்ற பழமொழி உருவானது.

 

அரசனைப்போல எதனையும் தவறாகப் புரிந்து கொண்டு சம்பந்தமில்லாமல் செயல்படக் கூடாது என்பதே இப்பழமொழிக்கான விளக்கம் ஆகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here