கொலையும் செய்வாள் பத்தினி

கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை எருமைக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. கூட்டத்தில் இருந்த சிறுவன் பெரியவரிடம் “தாத்தா பத்தினி என்றால் கொலை செய்வார்களா?” என்று கேட்டான்.

அதற்கு பெரியவர் “நம் நாட்டில் ‘பத்தினித் தெய்வம்’ என்று கற்புடைய மகளிரை போற்றி வணங்குவர். அப்படி இருக்கையில் பத்தினியை கொலை செய்யத் தூண்டும் விதமாக இந்தப் பழமொழியை எவ்வாறு கூறியிருக்க முடியும்?. இப்பழமொழியை விளக்கி கூறுகிறேன் கேளுங்கள்.”

பழமொழியின் விளக்கம்

சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கண்ணகியின் கதை எல்லோருக்கும் தெரியும். பாண்டியமன்னன் நெடுஞ்செழியன் கண்ணகியின் கணவனான கோவலனை பாண்டியஅரசியின் கால்சிலம்புகளை திருடிய கள்வன் என்று கருதி அவனை கொன்றுவிடுமாறு தவறாகத் தீர்ப்பு வழங்கிவிட்டான்.

பாண்டியனின் ஆணைப்படி கோவலன் கொலை செய்யப்பட்டான். இதனை அறிந்த கண்ணகி நேராக பாண்டியனின் அவைக்குச் சென்றாள்.

கோவலன் வைத்திருந்தது தன்னுடைய மாணிக்க பரல்கள் கொண்ட கால்சிலம்பு என்றும், பாண்டிய அரசியின் கால்சிலம்பு முத்து என்றுகூறி தன்னுடைய கால் சிலம்பினை உடைத்தாள். பின் தன்னுடைய கணவனின் கொலை நியாயமற்றது என்று அதற்காக வழக்குரைத்தாள்.

கண்ணகியின் வாதத்தினைக் கேட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னுடைய தவறாகத் தீர்ப்பினை எண்ணி உயிர் துறந்தான். இதனைத் தொடர்ந்து பாண்டியனின் மனைவியான கோப்பெருந்தேவியும் உயிர் துறந்தாள்.

அதாவது பாண்டியன் மற்றும் பாண்டிமாதேவியின் மரணத்திற்கும் கணவனின் மீது பற்று கொண்ட ‘கற்பின் அரசி’ யான கண்ணகிதான் காரண கர்த்தா!.

இச்செய்தியை மக்களுக்கு விளக்கும் விதமாகவே ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்ற பழமொழி உருவாகியது.

இன்றும் சில தாய்மார்கள் கிராமங்களில் “என் புருசனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு காரணமாவங்கள வெட்டியே கொன்னு போட்டுவேன்” என்று கூறுவதைக் காணலாம்.  இவையெல்லாம் இந்தப் பழமொழியை நினைவூட்டக் கூடிய நிகழ்ச்சியாக அமைகிறது.

நம்நாட்டுப் பெண்கள் தங்களது தாலிக்கும், கற்புக்கும் ஊறுவிளையும்போது அதை தவிர்க்கவும், அதிலிருந்து தப்பிக்கவும் கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள் என்பதை தெளிவாக விளக்குவதற்காக உண்டான பழமொழியே இது.” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here