நொச்சி – மருத்துவ பயன்கள்

நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; காய்ச்சலைப் போக்கும்; ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்; மாதவிலக்கை தூண்டும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்.

நொச்சி பூ குளிர்ச்சி உண்டாக்கும்; துவர்ப்புச் சுவையைத் தூண்டும். நொச்சி வேர், காய்ச்சலை கட்டுப்படுத்தும். கோழையை அகற்றும்; சிறுநீரைப் பெருக்கும்.

நொச்சி சிறு மரமாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும். நொச்சி இலைகள், கைவடிவமான 3 அல்லது 5 கூட்டிலைகளுடன் கூடியவை. தலைகீழ் ஈட்டி வடிவமானவை. மணமுள்ளவை. நொச்சி இலை கீழ்புறம் சாம்பல் நிறமான உரோமப் பூச்சு காணப்படும்.

நொச்சி மலர்கள் கொத்தாக நுனியில் அல்லது இலைக் கோணத்தில் அமைந்தவை. கருஞ்சிவப்பு அல்லது செங்கருநீலமானவை.

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வேலிகள், தரிசு நிலங்களில் இயற்கையாக வளர்கின்றது. மலைப் பகுதிகளில் வளர்பவை அதிகமான உயரத்துடன் காணப்படும்.

இந்திர சூரியம், நித்தில், நிர்க்குண்டி, சிந்துவாரம் ஆகிய பெயர்களும் நொச்சிக்கு உண்டு. நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை.

ஒரு தேக்கரண்டி நொச்சி இலைச் சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு நெய் சேர்த்து, காலை, மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். மேலும் நொச்சி, உத்தாமணி இலைகளை வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.

நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, பீனிசம் ஆகியவை குணமாகும்.

நொச்சி இலையை அரைத்து மண்ணீரல் வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம்.

நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம் குணமாகும்.

நொச்சி இலையை அரிசிக் கஞ்சியில் அரைத்து புண்களைக் குணமாக்க உபயோகிக்கலாம். பொதுவாக, நொச்சி இலைச் சாற்றைக் கொண்டு புண்களை கழுவி மருந்திடலாம்.

ஒரு பிடி நொச்சி இலைகளை 2 லிட்டர் கொதி நீரில் போட்டு வேது பிடிக்க மண்டை நீரேற்றம் கட்டுபடும்.

நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பைமேனி, ஆடாதோடை, நாயுருவி ஆகியவற்றை வகைக்கு ஒரு பிடி வாயகன்ற மண் கலத்தில் இட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பொறுக்கும் சூட்டில் வேது பிடிக்க வாதநோய்கள், தலைவலி போன்றவை குணமாகும். கொதித்த நீரைத் துணியில் நனைத்து ஒற்றமிடலாம்.

நொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளிக்க பிரசவித்தவர்களின் அசதி குறையும்.

கருநொச்சி- நீலநொச்சி

நொச்சித் தாவரத்தைப் போன்றே இருந்தாலும் இலைகள் மற்றும் தண்டுகள் நீல நிறமானவை. மேலும் நொச்சியின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.

கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் முதலியவற்றிற்குச் செய்யப்படும் மருந்துகளில் கரு நொச்சி சிறப்பாகச் சேர்க்கப்படுகின்றது.

கால் வீக்கத்தை குறைக்க கரு நொச்சி இலைகளை அரைத்து பற்றுப் போடும் பழக்கம் கிராம மருத்துவத்தில் உள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here