உங்க வயசுக்கு ஏத்த மாதிரி தூங்குங்க! தூக்கம் அவசியம்.!

வாழ்நாள் முழுக்க ஓடி உழைத்த மனிதன் தனது களைப்பை போக்கி கொள்வதற்கு தேர்ந்தெடுத்த ஒரு ஓடம் தான் ஓய்வு. இயந்திரங்களை போல உழைத்தாலும் கடைசியில் நாம் நோக்கி செல்லும் பாதையும் ஓய்வு தான். ஆனால், இந்த ஓய்வில் பல வகை உண்டு. சிலர் நீண்ட நேரம் ஓய்வெடுப்பார்கள். சிலர் மிக குறைந்த நேரம் ஓய்வெடுப்பார்கள்.
பொதுவாக தூங்குவதற்கென்று அறிவியல் சார்ந்த ஒரு வரையறை உண்டு. அதாவது ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு உறக்கம் உள்ளது. அந்த அளவில் தூங்கினால் ஆரோக்கியமாக இருக்கலாம். இல்லையென்றால் பலவித விளைவுகள் ஏற்படும். அவை என்னென்ன என்பதை இனி அறிவோம்.
இன்று பலர் நிம்மதியான தூக்கமில்லாமல் தான் அவதிப்படுகின்றனர். யாராக இருந்தாலும் சரியான அளவு தூக்கம் கட்டாயம் தேவைப்படும். அரைகுறையான தூக்கம் உங்களின் உடலை மிக மோசமாக பாதிக்க கூடும். உடல் நலத்தையும், உளவியல் ஆரோக்கியதையும் பெரிதாக பாதிக்க கூடும்.
ஒவ்வொரு வயதினருக்கும் தூக்கத்தின் அளவு வேறுபடும். இதில் மாற்றம் ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் இவைதான்…
– மன அழுத்தம்
– ஹார்மோன் சமநிலை சீர்கேடு அடைதல்
– இதய நோய்கள்
– பார்வை குறைபாடு
– சர்க்கரை நோய்
– பித்து பிடித்தல்
– உடல் எடை கூடுதல்
பிறந்த குழந்தை (0-3 மாதங்கள்)
பிறந்த குழந்தை ஏற்கனவே தாயின் கருவறையில் அதிக நேரம் தூங்கி கொண்டே இருந்திருக்கும். அதை போன்று தான் பிறந்த சில மாதங்கள் வரை நிம்மதியாக அதிக நேரம் அந்த குழந்தை தூங்க வேண்டும். குறிப்பாக பிறந்த முதல் 3 மாதங்கள் வரை 14-17 மணி நேரம் குழந்தை தூங்க வேண்டும். இல்லையென்றால் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு, உடல் நல குறைபாடுகள் குழந்தைக்கு ஏற்படும்.
4-11 மாத குழந்தைக்கு
குழந்தை பிறந்து சிறிது காலம் சென்ற பிறகு, அந்த குழ்நதையின் தூக்க நேரங்கள் சற்றே மாறுபடும். பிறந்த 4 மாதத்திற்கு பிறகு குழந்தை 12-15 மணி நேரம் தூங்க வேண்டும். இந்த தூக்க நேரம் 12 மாதம் வரை இதே நிலையில் இருக்க வேண்டும்.
1-5 வயது வரை
குழந்தை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கும். 1 முதல் 2 வயது வரை அந்த குழந்தை 11-14 மணி நேரம் ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும். இந்த வயதில் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைத்து கொடுமை செய்யாதீர்கள். மேலும், 3 முதல் 5 வயது வரை அந்த குழந்தை 10-13 மணி நேரம் தூங்க வேண்டும். இதில் மாறுபாடு இருக்க கூடாது.
6-13 வயதினருக்கு தூக்க நேரம் என்ன..?
இப்போது குழந்தை பருவத்தில் இருந்து சிறுவன் அல்லது சிறுமியாக மாறியுள்ளனர். அதிக விளையாட்டுத்தனம் நிறைந்த வயது இது. எவ்வளவு நேரம் விளையாடுகிறார்களோ அவ்வளவு நேரம் அவர்கள் உறங்க வேண்டும். அதாவது, 6 முதல் 13 வயதுள்ள சிறுவர்(அ) சிறுமி 9-11 மணி நேரம் தூங்க வேண்டும்.
14-17 வயதுள்ளவர்களுக்கு
பொதுவாக இந்த வயதை நாம் டீன் ஏஜ், அதாவது பதின் பருவம் என்று சொல்வோம். எண்ணற்ற யோசனைகள் வர கூடிய வயது இதுதான். அதிக சிந்தனையும், அதிக உடல் உழைப்பையும் இந்த வயது சிறுவர்(அ) சிறுமிகள் எடுத்து கொள்வார்கள். எனவே இவர்கள் 8-10 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
துடிப்பான வயது
18 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் மிகவும் துடிப்பானவர்களாக இருப்பார்கள். இந்த வயதில் அதிக தூக்கம் தேவை கிடையாது. மாறாக ஆழ்ந்த சிந்தனையும், அறிவியல் சார்ந்த பார்வையும் மேலோங்க தொடங்கும். எனவே, இவர்கள் 7-9 மணி நேரம் தூங்கினாலே போதுமானது.
நீல் பாதை
துடிப்பான வயதுடனே கடமைகளும் சேர தொடங்கும் வயது தான் இந்த 26 வயதிற்கு பிறகுள்ள அடுத்த 30 வருடங்கள். நமது பாதி வாழ்க்கையை ஆடி ஓடி வாழ்ந்து விட்ட நாம் அடுத்த பாதி வாழ்வை நிம்மதியாக வாழ வேண்டும். 26 வயது முதல் 64 வயது வரை 7-9 மணி நேர தூக்கமே சிறந்தது. இந்த அளவு அதிகரிக்கவும் குறையவும் கூடாது. மீறினால் எளிதில் நோய்கள் தாக்க கூடும்.
மீண்டும் குழந்தை பருவமே..!
ஒரு வழியாக நமது வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டிய வயதை நாம் எட்டி விட்டோம். இந்த வயதில் நாம் மீண்டும் ஒரு குழந்தையாகவே மாறி விடுவோம். ஒரு அழகிய மாற்றத்திற்கான வயது தான் இது. நமது வாழ்வை பல முறை அசை போட வேண்டிய வயது இதுதான். 65 வயதுக்கு மேல் 7-8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here