நேரம் தாண்டி பட்டாசு வெடித்தால் என்ன தண்டனை?


தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டி, தீபாவளி அன்று தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த நேரத்துக்கு முன்னாலோ, பின்னாலோ பட்டாசு வெடிப்பவர்கள் மீது என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகள் எடுப்பது என்று தமிழக காவல்துறை உயரதிகாரிகள் குழம்பிப் போயிருக்கிறார்கள். தமிழக டிஜிபி அலுவலகத்தில் நேற்றும் இன்றும் இது தொடர்பான ஆலோசனை நடந்தது.

“உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி கொடுத்திருக்கிறது தமிழக அரசு. ஆனால் தீபாவளிக்கு முதல் நாள் இரவில் இருந்தே பட்டாசுகளை வெடிப்பார்கள். அதிகாலையும் வெடிப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? அல்லது யார் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பணியில் ஈடுபடுவதா?” என்று அந்த ஆலோசனையில் உயரதிகாரிகள் விவாதித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் உள்ள சட்ட ரீதியான சிக்கல்களை ஒப்புக் கொண்ட டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் ஓர் அறிவுரையை வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாய்மொழியாக ஓர் உத்தரவு போயிருக்கிறது.

அதில், “உச்ச நீதிமன்றம் வரையறுத்த நேரம் தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது ஒவ்வொரு ஸ்டேஷன் லிமிட்டிலும் வழக்குப் பதிவு செய்து வையுங்கள். பின்னால் உச்ச நீதிமன்றம் இதுபற்றிய விவரங்களைக் கேட்கும்போது தமிழக அரசு சார்பில் நாம் இந்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தல் என்ற வகையில் வழக்குப் பதிவு செய்யுங்கள். என்ன பிரிவுகள் என்பதை மீண்டும் தெரிவிக்கிறோம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

டிஜிபி அலுவலகத்தின் வாய்மொழி உத்தரவிலும் தெளிவடையாமல் தமிழகம் முழுதும் போலீஸார் குழம்பியிருக்கிறார்கள். ‘’இவங்க வெடி வெடிக்கிற பிரச்னையில எங்க தலையே வெடிச்சிடும் போலிருக்கு” என்கிறார் ஒரு காவல்துறை இன்ஸ்பெக்டர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here