கிரெடிட் கார்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!!!


இன்றைய நிதி நிர்வாகத்தில் பலருக்கும் தவிர்க்கமுடியாத விஷயமாகிவிட்டது, கிரெடிட் கார்டு. அதை சரியாகப் பயன்படுத்தி, உரிய நேரத்தில் தவணைகளைச் செலுத்துவதன் மூலம் நல்ல கடன் வரலாற்றைப் பராமரிக்க முடியும்.

பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம். சிலர், தமது செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில், கிரெடிட் கார்டை திருப்பி அளித்துவிடலாம் என்று எண்ணலாம்.

உண்மையாகவே அவற்றை ரத்துச் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது அப்படியே பயன்படுத்தாமல் வைத்திருக்கப் போகிறீர்களா? கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது சரியான வழியா?

அது நம்மைப் பாதிக்குமா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்.
கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது, ‘சிபில்’ எனப்படும் உங்களின் கடன் மதிப்பெண்ணைப் பாதிக்கும் என்றாலும், அது, கிரெடிட் உச்ச மதிப்பு, கார்டை பயன்படுத்திய காலம், உங்கள் மொத்த கிரெடிட் கார்டு தொகுப்பில் குறிப்பிட்ட கார்டின் விகிதம் போன்ற முக்கியக் காரணிகளைப் பொறுத்தது.

உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூடும்போது, உங்களின் மொத்த கடன் வரம்பும் குறையும் என்பதால், கடன் மதிப்பெண்ணும் குறையும். குறையக்கூடிய மதிப்பெண்ணின் அளவு, உங்களின் மற்ற கிரெடிட் கார்டுகளில் உள்ள கடனின் அளவைப் பொறுத்தது. அதாவது, அதிகக் கடன் வரம்புள்ள கார்டை ரத்து செய்யும்போது, குறைந்த வரம்புள்ள கார்டை ரத்து செய்வதைக் காட்டிலும் அதிகப் பாதிப்பு ஏற்படும்.

உங்கள் கிரெடிட் கார்டின் பயன்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதால், கார்டில் எப்போதும் பாக்கி வைக்காமல் பார்த்துக்கொள்வது, கடன் மதிப்பெண்ணுக்கு உதவியாக இருக்கும்.

குறைந்த அளவு கடனுள்ள கிரெடிட் கார்டை ரத்து செய்யலாம் என்ற தவறான கருத்து நிலவுகிறது. நீங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்ய விரும்புகிறீர்களோ இல்லையோ, பாக்கியுள்ள கடனை கட்டியே ஆக வேண்டும்.

அதன் கணக்கை மூடாமல், பாக்கி கடனை கட்டி முடித்துவிட்டு அட்டையைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தாலும் கடன் வரம்பு அப்படியே இருக்கும். நீங்கள் கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆகவேண்டும் என்றால், அதே அளவு அல்லது அதைவிட அதிக வரம்புள்ள கார்டை வாங்காதவரை உங்களின் ஒட்டுமொத்தக் கடன் வரம்பு குறைந்துவிடும்.

அதிகபட்ச கடன் வரம்பை வைத்திருப்பது எப்போதும் உதவும் என்றாலும், சில நேரங்களில் கிரெடிட் கார்டுகளை திருப்பிக் கொடுக்கலாம். அதாவது, உங்களால் செலவு செய்வதை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து, கார்டை பயன்படுத்தும் தூண்டுதலைத் தவிர்க்க.

நீங்கள் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும்போது அல்லது உங்களின் கார்டில் அதீத வட்டி விகிதம் விதிக்கும்போதும், தேவையற்ற கட்டணங்கள் வசூலிக்கும் போதும். உங்களின் தேவைக்கு ஏற்றவாறு, அதிகச் சலுகைகள் தரும் கிரெடிட் கார்டு கிடைத்தால், நீங்கள் தற்போதைய இதே அளவு வரம்புள்ள கார்டாக அதை மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் செலவு செய்த அல்லது கடந்தகால வட்டி பாக்கி இருந்தால், அவற்றைச் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தவறாகக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது எனக் கருதினால், அதற்கு உரிய இடத்தில் முறையிட்டு, கார்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

சில வங்கிகள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது வழங் கும் சலுகைப்புள்ளிகள் பாக்கியிருந்தால், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின்பு அவற்றைப் பயன்படுத்த முடியாது என்பதால் முன்னரே பயன்படுத்திவிடுங்கள். அரிதாகச் சில நிறுவனங்கள், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின் குறிப்பிட்ட காலத்துக்கு அந்தச் சலுகை புள்ளிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன அல்லது அதே வங்கியில் வேறு கிரெடிட் கார்டு பெற்றால், சலுகைப்புள்ளிகளை அதற்கு மாற்றவும் வழிவகை செய்கின்றன.

ஏதேனும் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையில் தானாகப் பணம் கழிக்கும் வசதியை கார்டில் தேர்வு செய்திருந்தால், அதை ரத்து செய்தபின் பிரச்சினை ஏற்படும் என்பதால் மறக்காமல் இவ்வசதியை நீக்க வேண்டும்.

சரி, கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆக வேண்டும் என்றால், அதைச் செய்வது எப்படி?
வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து, கார்டை ரத்துச் செய்வது பற்றித் தெரிவிக்கலாம். மின்னஞ்சல் வாயிலாக ரத்துச் செய்யக் கோரலாம். இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம். வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பம் அளிக்கலாம். கிரெடிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்துவதும், ரத்துச் செய்வதும் நமது முடிவு. நம் சூழ்நிலைக்கு ஏற்ப இவ்விஷயத்தில் விவேகமாக முடிவெடுக்கலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here