ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த நேரடி விழிப்புணர்வு


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விவசாயப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திங்கள்கிழமை நேரடியாக வயல் வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
மூன்றாம் வகுப்பு சமூகவியல் 2 ம் பாடத்தில் உணவின் கதை என்ற தலைப்பிலான பாடத்தில் நெல் சொல்லும் கதை என்ற பாடம் உள்ளது. மேலும் நான்காம் வகுப்பு தமிழ் பாடத்தில் நெல் குறித்த பாடம் வந்துள்ளது. இந்த மாணவர்களை அருகில் உள்ள வயல் வெளிக்கு அழைத்துச் சென்று நேரடியாக பாடங்கள் குறித்து விளக்க தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் முடிவு செய்தார்.
தற்போது இப் பகுதியில் மழை பெய்து விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கி.சீனிவாசன், கோ.விஜயலட்சுமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் அருகில் உள்ள தோப்பூர்-பண்ணை வயல் வெளிக்கு மாணவ மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஆசிரியை கா.ரோஸ்லினா மற்றும் விவசாயிகள் மாணவர்களுக்கு விவசாயப் பணிகள் குறித்து விளக்கினர்.
உழப்பட்ட நிலத்தில் விதைகளை விதைப்பார்கள். வளர்ந்த நாற்றுகளைப் பறித்து, நீர் குறைந்த பண்படுத்தப்பட்ட நிலத்தில் நடுவர். களைகளை எடுப்பர். பயிர் வளர்ந்து வரும் பொழுது நீர் பாய்ச்சுவர். கதிர் முற்றியபிறகு அறுவடை செய்வர். கதிர் அடித்து நெல்மணிகளைப் பிரிப்பர். பின்னர் அரவை ஆலையில் அரிசியாக மாற்றுவர் என அங்குள்ள விவசாயப் பணிகள் மாணவர்களுக்கு எளிமையாக, நேரிடையாக விளக்கப்பட்டது.
மாணவர்களுக்கு அனைத்து விவசாயப் பணிகளையும் விளக்கிய விவசாயிகளுக்கும், நேரடியாக மாணவர்களை வயல் வெளிக்கு அழைத்துச் சென்று பாடம் நடத்திய தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் மற்றும் ஆசிரியை கா.ரோஸ்லினாவை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கி.சீனிவாசன், கோ.விஜயலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here