புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அக்டோபர் 27-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 27-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன் கூறினார்.

இதுகுறித்து, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
6-ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கோரிக்கைகள் குறித்து, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அளித்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, தமிழக அரசு போராட்டக் குழுக்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஒன்றிணைந்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டுள்ளதால், வலிமை குறைந்துவிட்டதாக அரசு கருதுகிறது. எனவே, ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கான முயற்சிகளை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மேற்கொண்டு வருகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் ஜாக்டோ சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 27-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
பேட்டியின் போது, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஈவேரா, முன்னாள் மாவட்ட செயலாளர் மதிவாணன், மாவட்டத் தலைவர் இரா.முருகேசன், மாவட்டப் பொருளாளர் ஆ.சுபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here