தமிழகம்: அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை!


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, மடிப்பாக்கம், மதுரவாயல், நங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம், பம்மல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 18) செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா. அப்போது பேசிய அவர் “வெப்பசலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைபெய்யும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது. வரும் 20ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும். அப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கச் சாதகமான சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாகப் பெய்யும்.

வளிமண்டலத்தில் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஆம்பூர், வேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here