கரிசலாங்கண்ணி – மருத்துவ பயன்கள்

கரிசலாங்கண்ணி கல்லீரலை உறுதிப்படுத்தும்; வீக்கத்தைக் குறைக்கும்; காமாலையைக் குணப்படுத்தும்; உடலைப் பலமாக்கும்; மலமிளக்கும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்; முடி வளர்ச்சியைத் தூண்டும்.

இதற்கு இரத்தத்திலுள்ள அமிலத்தன்மையைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. இதனால், இரத்த சோகை, தோல்நோய்கள் போன்றவையும் கட்டுப்படும். கரிசாலை இலைகளை, கீரையாகத் தொடர்ந்து உபயோகித்து வர, கண் பார்வை தெளிவடையும்.

இராமலிங்க வள்ளலார், கரிசாலையை கற்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். கரிசாலைச் சாற்றால் வாய் கொப்பளித்து வர பற்களும் ஈறுகளும் நாக்கும் சுத்தமாகும். மேலும், தொண்டை நோய்கள் குணமாவதுடன் நுரையீரலும் சுத்தமடையும் என்கிறார்.

கரிசலாங்கண்ணி முழுத்தாவரம் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. கரிசலாங்கண்ணி சிறு செடி வகையைச் சார்ந்தது. இலைகள், எதிரெதிராக அமைந்தவை. அகலத்தில் குறுகியவை, நீண்டவை, சொரசொரப்பானவை. மலர்கள், சிறியவை, வெண்மையானவை, சூரியகாந்தி மலர் போன்ற தோற்றம் கொண்டவை. கிளைகளின் நுனியில் காணப்படும்.

வாய்க்கால் மற்றும் வயல் வரப்புகள், சாலையோரங்கள், ஆற்றங்கரைகளில் கரிசலாங்கண்ணி களைச்செடியாக வளர்ந்து, மிகவும் செழிப்பாகக் காணப்படும். கரிசாலை, கையான், கரிப்பான், பிருங்கராஜம், யாந்தகரை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்கள் கரிசாலைக்கு உள்ளது. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.

மஞ்சள் காமாலை தீர பசுமையான கரிசலாங்கண்ணி இலைகளைச் சுத்தம் செய்து, பசையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு, ஒரு டம்ளர் மோரில் கலந்து, உள்ளுக்கு சாப்பிட்டுவர வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தக் காலத்தில், உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்பட தேவையான அளவு பசுமையான கரிசாலை இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, நன்றாகக் கழுவி, பசையாக அரைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன், 2 பங்கு தண்ணீர் சேர்த்துக் குழைத்து 2 பங்கு நல்லெண்ணெயில் கலந்து, அடுப்பில் வைத்து, நீர் வற்றுமளவிற்கு காய்ச்சி, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். இதனை ¼ தேக்கரண்டி அளவு, 100 மி.லி. காய்ச்சிய பாலில் கலந்து, குடித்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.

கண் பார்வை தெளிவடைய கரிசலாங்கண்ணித் தைலம்:கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தைலத்தால் தலைமுழுகிவர வேண்டும். மேலும், தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும்.

இளநரை மாற: கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலர்த்தி, தூளக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் ½ தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

தலைமுடி அடர்த்தியாக வளர:கரிசலாங்கண்ணி இலைகளைப் பசைபோல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணெயில் ஊறவைத்து தலையில் தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.

மலச்சிக்கல் தீர தினமும், காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட்டுவர வேண்டும்.

 

மஞ்சள் கரிசலாங்கண்ணி:பெரிய, மஞ்சள் நிறமான பூக்களைக் கொண்ட, கரிசலாங்கண்ணியின் வளரியல்பிலிருந்து மாறுபட்ட தாவரம். அதிகமாக இயற்கையில் வளர்வதில்லை. மஞ்சள் கரிசலாங்கண்ணி, பொற்றலை, பொற்கொடி, பொற்றலைக் கரிப்பான், பொற்றலைக் கையாந்தகரை ஆகிய பெயர்களும் மஞ்சள் கரிசாலைக்கு உண்டு.

சில இடங்களில், முக்கியமாக நீர்வளம் மிகுந்த இடங்களில் வளரும். பெரும்பாலும், வீடுகளில், அழகிற்காகவும், அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது.
மஞ்சள் கரிசாலையை உட்கொள்ள, உடலுக்குப் பொற்சாயலையும், (பொற்றலைக்கை யாந்தகரை பொன்னிறமாகக் கும்முடலை… அகத்தியர் குணபாடம்), கண்ணிற்கு ஒளியையும் தெளிவையும் உண்டாக்கும்.

பாண்டு, சோகை, காமாலை முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலைப் பலப்படுத்தும். பித்த நீர்ப்பெருக்கியாகவும், மலமகற்றியாகவும் செயல்படும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும். இலைகளே முக்கியமாக மருத்துவத்தில் பயன்படுகின்றன. கரிசலாங்கண்ணியின் மருத்துவ உபயோகங்கள் இதற்கும் பொருந்தும் அனைவரும் எளிதில் வளர்த்துப் பயன்பெறலாம்.

முடி கருமையடைய ஒரு பிடி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துவர வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஜலதோஷம் தீர இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, சிறிதளவு தேனுடன் குழைத்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.

இருமல் தணிய இலைச்சாறு ½ லிட்டர், நல்லெண்ணெய் ½ லிட்டர், ஒன்றாக்கி, சிறு தீயில் நீர் வற்றும்வரை காய்ச்சி, வடிகட்டி பத்திரப்படுத்திக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை, வேளைகளில் ஒருவாரம் வரை சாப்பிட்டுவர வேண்டும்.
மலச்சிக்கல் தீர இலையை, பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்து, சாதத்துடன் பிசைந்து உட்கொள்ள வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here