“சிசிடிவி கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து” – ஒரு அலர்ட் ரிப்போர்ட்!

சிசிடிவி கேமராக்களை இணையம் மூலம் செல்போனுடன் இணைப்பதால் அவை ஹேக் 
செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் குற்றங்களை குறைக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. தங்கள் வீடு, கடை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு பொதுமக்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

சிசிடிவி கேமராவை பொருத்திவிட்டால் அதில் பதிவாகும் காட்சிகளை அந்த இடத்தின் உரிமையாளர் எங்கிருந்து வேண்டுமானாலும் செல்போன் மூலம் பார்க்கலாம். இணையம் மூலம் செல்போனையும் சிசிடிவி கேமராவையும் இணைப்பதால் இது சாத்தியமாகிறது. எந்த ஒரு வசதியிலும் ஆபத்தும் சேர்ந்துதான் இருக்கும் என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிசிடிவி கேமராவும், செல்போனும் இணையம் மூலம் இணையும் போது ஹேக்கர்களால் அதை எளிதில் ஹேக் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஹேக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட கேமராவை கட்டுப்படுத்தவோ, அதில் பதிவான காட்சிகளை திருடவோ, அழிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ ஹேக்கர்களால் முடியும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தப்பிக்க என்ன வழி?

தப்பிக்க சிசிடிவி கேமராவின் மென்பொருளை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும். பொதுவாக இந்த SOFTWARE-களை 3 மாதத்துக்கு ஒருமுறை அந்தந்த நிறுவனங்கள் புதுப்பிக்கும். அவற்றை சிசிடிவி கேமரா பொருத்தியிருப்பவர்கள் அப்டேட் செய்து கொண்டால் ஹேக்கர்களிடம் இருந்து தப்ப முடியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் பொது இடங்களில் மட்டும் 50,500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் இம்மாதம் வரை சென்னையில் 405 செல்போன் மற்றும் சங்கிலிப் பறிப்பு குற்றங்கள் நடந்துள்ளன. அவற்றில் 343 வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க உதவியது சிசிடிவி கேமராக்கள்தான். தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட சிசிடிவி கேமராவை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதே வல்லுநர்கள் கூறும் அறிவுரை.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here