தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் பவள விழா

தேவகோட்டை,அக்.15 தேவகோட்டை தே பிரித்தோ மேனிலைப்பள்ளியில் பவள விழா அக்டோபர் 12,13,14 ஆகிய மூன்று நாட்கள் கொண்டாடப் பெற்றது.

முதல் நாள் நடைபெற்ற தொடக்கவிழாவில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் முனைவர் செ.சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். இயேசுசபை மறை மாநிலத்தலைவர் அருள்முனைவர் P.டெனிஸ் பொன்னையா சே.ச அவர்கள் முன்னிலை வகித்துப் பேசினார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் முன்னாள் மாணவர் மன்றம் & வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்ற வெளியீடாக வெளியிடப்பெற்ற ‘நேற்று-இன்று-நாளை’ நூல் வெளியீட்டு நிகழ்வில் புதுதில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் முருகேசன், இயேசுசபை சென்னை மறைப்பணித்தள அதிபர் அருள்முனைவர் என்.செபமாலை ராசா சே.ச , ஆஸ்திரேலியத் தொழிலாளுநர் அண்ணாசுந்தரம் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சக அறிவியலாளர் சரவணன், பள்ளி மேலாண்மை அருட்தந்தையர் உள்ளிட்ட சான்றோர் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்..
இரண்டாம் நாள் பிற்பகல் தே பிரித்தோ மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும், முதுபெரும் இயக்குநருமான ‘கலைமாமணி’ சுப.முத்துராமன், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்ற மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.
பின்னர் அவர் முன்னாள் மாணவர் சங்கம நிகழ்வில் பேசியதாவது: “நேற்று-இன்று-நாளை பவளங்கள்-75 என்னும் பவள விழா வெளியீட்டு நூலில் தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியின் 75 ஆண்டுகால வரலாற்றையும், 1943 முதல் 1993 முடிய பள்ளியில் பயின்ற நேற்றைய கலை இலக்கிய ஆளுமைகள் இருபத்தைவர், 1994 முதல் 2018 வரை பயின்ற இன்றைய கலை இலக்கியச் சாதனையாளர்கள் இருபத்தைவர், தற்பொழுது பள்ளியில் பயிலும்
கலை இலக்கியப்போட்டிகளின் மாவட்ட, மாநில வெற்றியாளர்களான நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் இருபத்தைவர் என நேற்று-இன்று-நாளை என்னும் தலைப்பில் பவளங்கள் எழுபத்தைந்தாக அவர்களது நிழற்படம் மற்றும் குறிப்புகளுடன் வெளியிட்டிருப்பது தமிழகக் கல்வி நிறுவனங்களில் நான் எங்கும் பார்த்திராத புதிய முயற்சி, அரிய சாதனை. உண்மையாகவே
நூலாசிரியர்களான பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் இ.இருதய வளனரசு சே.ச அவர்களும், பட்டதாரி தமிழாசிரியர் முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் அவர்களும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். நான் இயக்குநராக அடித்தளம் அமைத்துத் தந்தது இந்தப்பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை ஆல்பர்ட் மச்சோடா சே.ச அவர்கள்தான். இங்கு பயிலும்போது தமிழறிஞர் மு.வ பேசியதைக் கேட்டபிறகுதான் திருக்குறள் மீது எனக்கு ஈடுபாடு வந்தது. அதற்குப் பிறகு நான் பேசுகிற ஒவ்வொரு மேடையிலும் நான் திருக்குறள் சொல்லாமல் என் பேச்சை முடிப்பதில்லை” என்று பேசினார்..
நிகழ்வில் வீ.எஸ்.ஆர் நிறுவனத் தலைவர் P.K.M.ராஜாங்கம் தலைமை வகித்தார்.முன்னாள் மாணவர் மன்ற இயக்குநர் அருட்பணி செ.ஜோசப் கென்னடி சே.ச , முன்னாள் மாணவர்மன்றத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மூன்றாம் நாளில் பிரித்தோ இல்ல விழாவில் சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதியரசர் ஆபிரகாம் லிங்கன் தலைமை வகித்தார். ஆனந்தூர் ஜமாத் தலைவர் P.இஸ்மாயில், மஹாராஷ்டிரா வருமானவரித்துறை உதவி ஆணையர் M.கிறிஸ்துராஜ், தேவகோட்டை முன்னாள் நகராட்சித்தலைவர் A.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். விழாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முன்னாள் ஆசிரியர்கள் அலுவலர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்த ஆசிரயர் ஸ்டீபன் நேவிஸ் பாராட்டப் பெற்றார். கவிஞர் அ.பௌலியன்ஸ் எழுதி, பாடிய பவள விழா பாடல் அரங்கேற்றம் செய்யப்பெற்றது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. பள்ளியின் அதிபர் செ.ஜோசப் கென்னடி, தாளாளர் முனைவர் அ.லூர்துசாமி, தலைமையாசிரியர் பெ.ஆரோக்கியசாமி, உதவித் தலைமையாசிரியர் இ.இருதய வளனரசு, பொருளாளர் செ.பாபு வின்சென்ட் மற்றும் ஆசிரிய- அலுவலர்கள் பவள விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here