பப்பாளி – மருத்துவ பயன்கள்

பப்பாளி கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. பப்பாளி காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும்; தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும்; உடலுக்கு வெப்பத்தைத் தரும். ஆரோக்கியம் தரும்; மாதவிலக்கைத் தூண்டும்; பசியை உண்டாக்கும்.

பப்பாளி பழம், கழிச்சல் உண்டாக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; உடலை பலமாக்கும்.
பப்பாளி மர வகையைச் சார்ந்தது. நீண்ட குழல் போன்ற காம்புகளின் நுனியில் பெரிய கை வடிவமான இலைகளைக் கொண்டது பப்பாளி.

பப்பாளி மரம் முழுவதும் மென்மையானது. எளிதாக உடையக் கூடியது.
பப்பாளி இலைகள் மரத்தின் உச்சியில் மட்டும் தொகுப்பாக காணப்படும். பப்பாளி தண்டையோ, கிளைகளையோ ஒடித்தால் பால் வரும்.

ஆண், பெண் மரங்கள் தனித் தனியானவை. ஆண் பப்பாளி மரங்களில் வெள்ளை, இளம் மஞ்சள் நிறமான பூக்கள் மட்டும் கொத்தாக தொங்கும். காய்கள் இருக்காது.
பெண் மரங்களில் பெரிய வெள்ளையான பூக்கள் நுனியில் தனித் தனியாக காணப்படும். பெரிய பச்சையான காய்கள், மஞ்சளான பழங்கள் பெண் மரங்களில் மட்டும் காணப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பப்பாளி மரங்கள் வளர்கின்றன; வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தோட்டங்கள் மற்றும் சாலை ஓரங்களிலும் பப்பாளி மரம் காணப்படுகின்றது. மலைப் பகுதிகளில் வளரும் பப்பாளி மரங்கள் அதிகமான உயரத்துடனும், பெரிய காய்களுடனும் காணப்படும்.

ஆண் பப்பாளி மரம் எங்கோ ஒன்று தான் காணப்படும். பெண் பப்பாளி மரமே அதிக எண்ணிக்கையில் காணப்படும். பப்பாளி இலை, பால், காய், பழம் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.

கட்டிகள் உடைய பப்பாளிப் பாலைப் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும் அல்லது பப்பாளி இலையை நசுக்கி வேக வைத்து கட்டியின் மீது வைத்துக் கட்ட வேண்டும்.

வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற பப்பாளிப் பாலை வயதுக்குத் தகுந்த முறையில் கீழ் வரும் வகையில் விளக்கெண்ணெய் சேர்த்து உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள்: 15 துளி பப்பாளிப்பால் + 15 துளி விளக்கெண்ணெய்
பெரியவர்கள்: 30துளி பப்பாளிப்பால் + 60 துளி விளக்கெண்ணெய்

பப்பாளியில் புரதத்தைச் செரிப்பிக்கும் ஒரு சத்துப் பொருள் அடங்கியுள்ளது. மாமிசம் சமைப்பவர்கள் பப்பாளிக் காய் சிறிதளவு மாமிசத்துடன் கலந்து வேக வைக்க உடனடியாக கறி வேகும்.

பப்பாளிக் காயைச் சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டு வர உடல் இளைக்கும்.

பப்பாளிக் காயைத் தோல் நீக்கி சாம்பார் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.

பொது ஆரோக்கியத்திற்கு

பப்பாளி முக்கியமான பழ வகைகள் ஒன்றாகும். பப்பாளி காய் சாம்பார் கூட்டு போன்ற உணவுகள் தயாரிப்பதிலும் கூட பயன்படுகின்றது. பப்பாளிப் பழத்தில் வைட்டமின் “ஏ” நிறைந்துள்ளது.

தினமும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும். கண்பார்வை தெளிவடையும். மாலைக் கண் நோய் குணமாகும். மலம் கழிப்பது எளிதாகும். இரத்தமும் சுத்தமாகும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here