வரும் 15 முதல் மீண்டும் கன மழை; சென்னையில் வெயில் தொடரும்

சென்னை : ‘வரும், 15ம் தேதி முதல், மேற்கு தொடர்ச்சி மலை 
பகுதிகளில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், இயல்பை விட, 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெயில் கொளுத்தும்’ என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை, கடந்த வாரம் முடியும் நிலையில் இருந்தது. ஆனால், மீண்டும் காற்று வலுப்பெற்று, இரண்டு புயல்களை உருவாக்கியது. வங்க கடலில் உருவான, ‘தித்லி’ புயல், ஆந்திராவின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒடிசாவை துவம்சம் செய்து, நேற்று முன்தினம் கரை கடந்தது. அதேபோல்,

அரபிக் கடலில் உருவான, ‘லுாபன்’ புயல், நீண்ட பயணத்துக்கு பின், ஓமன் மற்றும் ஏமன் இடையே, இன்று கரையை கடக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

புயல்கள் கரையை தொட்டதால், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை ஒட்டிய கடற்பகுதிகளில், கடல் சூழல், மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு இடையே, நிலப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், ‘வரும், 15ம் தேதி முதல், தென் மாநிலங்களில், மீண்டும் தென்மேற்கு பருவ மழை தொடரும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், ‘வரும், 15, 16ம் தேதிகளில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்
உள்ளிட்ட, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், கன மழை பெய்யும். மாநிலத்தின் சில இடங்களில், இடியுடன் கூடிய திடீர் மழையும் பெய்யலாம்’ என்று, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும். அதாவது, நடப்பு பருவ காலத்தில் இயல்பாக பதிவாக வேண்டிய 35 டிகிரி செல்ஷியஸை விட 2 டிகிரி அதிகமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here