தொட்டாற்சுருங்கி – மருத்துவ பயன்கள்

தொட்டாற்சுருங்கி முழுத்தாவரம் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத்தன்மையும் கொண்டது.

இதன் இலை, மூலநோய், பவுத்திரப் புண்களைக் குணமாக்கும்; உடலைத் தேற்றும்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாறு புண்களைக் குணமாக்கும்; அதி மூத்திரத்தைக் கட்டுப் படுத்தும்; காமம் பெருகும். வேர்  மூலநோய் மற்றும் வாதத் தடிப்பைக் குணமாக்கும்.

தொட்டாற்சுருங்கி பரந்து விரிந்த வளரியல்பு கொண்ட சிறுகொடி வகைத் தாவரம். தாவரம் முழுவதும் சிறு முட்கள் காணப்படும். இவை, நேராகவோ, வளைந்தோ இருக்கும். இலைகள், சிறகு வடிவமாக கூட்டிலையானவை. தொட்டால் வாடிவிடும் இதன் இலைகளின் சிறப்பான அமைப்பாலேயே இது தொட்டாற்சுருங்கி என்கிற பெயர் பெற்றது.

மலர்கள் தொகுப்பானவை, மென்மையானவை, இளஞ்சிவப்பு நிறமானவை. கனிகள் தொகுப்பானவை, அலைபோன்ற வளைவு கொண்டவை. தட்டையானவை. விளிம்புகளில் முள் போன்ற சொரசொரப்பான உரோமங்கள் காணப்படும்.கனியில் 5 விதைகள் வரை தட்டையாகக் காணப்படும். 

இந்தியா முழுவதும் சமவெளிகள், கடற்கரையோரங்களில், சிறிய தொகுப்பாக காணப்படுகின்றன. தமிழகத்தில், ஈரப்பாங்கான இடங்கள், ஆற்றங்கரைகள், சாகுபடி நிலங்களின் கரைகள் மற்றும் தரிசு நிலங்களில் வளர்கின்றன.

தொட்டாற்சிணுங்கி, தொட்டால்வாடி, இலச்சி, இலட்சுமி மூலிகை போன்ற மாற்றுப் பெயர்களும் இந்தத் தாவரத்திற்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.

நீரழிவு நோய் கட்டுப்பட தொட்டாற்சுருங்கி முழுத் தாவரத்தை உலர்த்தி தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு காலையில், வெந்நீருடன் 48 நாள்கள் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிகமான இரத்தப் போக்கை கட்டுப் படுத்த முழுச் செடியும் இடித்து சாறு எடுக்க வேண்டும். 4 தேக்கரண்டி அளவு சாற்றுடன், இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடிக்க வேண்டும். தினமும் மூன்று வேளைகள் அவ்வப்போது தயார் செய்த சாற்றைப் பருக வேண்டும். அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன், சிறிதளவு சீரகம், வெங்காயத்தைச் சேர்த்து, அரைத்து எலுமிச்சம் பழ அளவு சாப்பிட வேண்டும்.

வெட்டு காயங்கள் குணமாக முழுச் செடியை அரைத்து சாறு எடுக்க வேண்டும். காயத்தின் மீது சாற்றைத் தடவ வேண்டும். குணமாகும் வரை தினமும் இரண்டு வேளைகள் தொடர்ந்து தடவி வர வேண்டும்.

கை,கால் மூட்டு வீக்கம் குணமாக  இலையை அரைத்து, பசையாக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

ஒவ்வாமை, தோல் தடிப்புகள் குணமாக தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here