டிங்குவிடம் கேளுங்கள்: உலகிலேயே மிகப் பெரிய பறவை எது?பாம்பு தோல் உரிப்பது ஏன், டிங்கு?

பாம்பு தோல் உரிப்பதில்லை சட்டை போன்ற மேல்தோலைத்தான் உரிக்கிறது பாலமுருகன். பாம்பின் உடலைச் சுற்றி உட்தோல், வெளித்தோல் என்று இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. உட்தோல் மென்மையாக இருக்கும். வெளித்தோல் கெரட்டின் என்ற பொருளால் தடிமனாக உருவாகியிருக்கும். பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும்போது காயம் அடைந்துவிடாமல் இந்தத் தோல் சட்டை பாதுகாக்கிறது. வெளித்தோல் நாளுக்கு நாள் கெட்டியாகும். 70-90 நாட்களில் தடித்த வெளித்தோலால் பாம்புக்குப் பார்வை சக்தியே குறைந்துவிடும். அதனால் இந்தத் தோல் சட்டையை உரித்துவிடுகிறது, பாம்பு. உட்தோலுக்கும் வெளித்தோலுக்கும் இடையே ஒருவித திரவம் சுரப்பதால் வெளித்தோல் சட்டையை எளிதாக உரித்துவிட முடிகிறது. ஓராண்டுக்கு 3 முறையாவது பாம்புகள் சட்டையை உரிக்கின்றன, பால முருகன்.
விலங்குகளும் தாவரங்களும் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியுமா, டிங்கு?
என்ன, இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டீர்கள், சச்சுதன்! அனைத்து விதமான உயிரினங்களும் சேர்ந்து வாழ்ந்தால்தான் அது பூமியாக இருக்கும். உயிரினங்கள் ஒன்றை இன்னொன்று சார்ந்து வாழக்கூடியவையாகவே இயற்கையாக அமைந்துள்ளன. நீங்கள் சொல்வதுபோல், தாவரங்களும் விலங்குகளும் இல்லை என்றால் மனிதர்கள் உணவை எப்படிப் பெறுவார்கள்? தாவரங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும்தானே உணவைப் பெற்றுக்கொள்கிறோம். இவை இரண்டும் இல்லை என்றால், நாம் எவற்றைச் சாப்பிட முடியும்? தாவரங்களும் விலங்குகளும் இல்லாவிட்டால், பூச்சிகளும் பறவைகளும்கூட வாழ முடியாது. ஆனால், மனிதர்கள் இல்லாமல் தாவரங்களாலும் விலங்குகளாலும் நிம்மதியாக வாழ முடியும்!
உலகிலேயே மிகப் பெரிய பறவை எது, டிங்கு?
உலகிலேயே மிகப் பெரிய பறவை யானைப் பறவை. இது தற்போது உலகத்தில் வசிக்கவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். பழங்கால உயிரினமான யானைப் பறவையின் எலும்புகளை ஆராய்ச்சி செய்ததில், இது சுமார் 860 கிலோ எடை கொண்டதாக இருந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முழுமையாக வளர்ச்சியடைந்த ஒட்டகச்சிவிங்கியின் எடை சுமார் 860 கிலோ. அப்படியென்றால் யானைப் பறவையின் உடல் அளவைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். எடை அதிகம் கொண்ட யானைப் பறவை, பறக்க இயலாத பறவைகளில் ஒன்று, சூர்யா.
நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் வயதானவர் யார், டிங்கு?
2018-ம் ஆண்டுகான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின் என்ற இயற்பியலாளர், தன்னுடைய 96-வது வயதில் இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறார்! 1970-ம் ஆண்டு இவர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைக்காக இப்போது நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. முதுமையின் காரணமாக இவர் நேரில் சென்று பரிசைப் பெறுவாரா என்று தெரியவில்லை. ”இது என்னுடைய பழைய ஆராய்ச்சிக்கான பரிசு. இதைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை. இப்போது நான் வேறு புதிய ஆராய்ச்சியில் இருக்கிறேன். இந்த ஆராய்ச்சிதான் எனக்கு முக்கியம்” என்று சொல்லியிருக்கிறார், திவ்யதர்ஷினி.
உன் மீது கோபத்துடன் இருந்தேன். இரண்டு வாரங்கள் எங்கே போயிருந்தாய், டிங்கு?
உங்கள் அன்புக்கு நன்றி, ஆனந்த். நான் எங்கும் செல்லவில்லை. இரண்டு வாரங்கள் மாயாபஜாரில் இடப் பற்றாக்குறை இருந்ததால் சில பகுதிகள் இடம்பெறவில்லை. அதில் இந்தப் பகுதியும் மாட்டிக்கொண்டது. இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். இப்போது மகிழ்ச்சிதானே? டிங்குவிடம் கேளுங்கள்
நன்றி : இந்து தமிழ்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here