ரோஜா – மருத்துவ பயன்கள்

ரோஜா மலர்கள் காய்ச்சல், தாகம், ஓங்காளம், கீழ்வாய் எரிச்சல், வெள்ளைபடுதல், ஆகியவற்றைக் குணமாக்கும்; மலமிளக்கும்; கழிச்சலை உண்டாக்கும்.

ரோஜா சிறுசெடி வகையைச் சார்ந்தது. ரோஜா கூர்மையான, வளைந்த முட்கள் நிறைந்த கட்டை போன்ற தண்டில் கூர் நுனிப் பற்கள் கொண்ட சிறகு அமைப்பான கூட்டிலைகளையும் நுனியில் இளஞ்சிவப்பு நிறமான நறுமணமுள்ள மலர்களையும் கொண்டது.

காடுகளில் இயற்கையாக வளரும் ரோஜாவும் உண்டு. இவை மணம் குறைந்ததாக இருக்கும். தமிழகமெங்கும் இதன் வாசனையுள்ள அலங்கார மலர்களுக்காகவும், மருத்துவ உபயோகங்களுக்காகவும் ரோஜா செடி பயிர் செய்யப்படுகின்றது.

ரோஜா மலர்களே மருத்துவப் பயன் கொண்டவை. ரோஜா பூக்களில் இருந்து அத்தர் எனப்படும் நறுமணம் பொருந்திய எண்ணெய் பெறப்படுகின்றது.

50 ரோஜா பூ இதழ்களை ½ லிட்டர் வெந்நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு 25 மிலி பன்னீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை மூன்று வேளையாகக் குடிக்க வெள்ளை படுதல் குணமாகும்.

10 கிராம் ரோஜா பூவை ½ லிட்டர் நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்க பித்த நோய் கட்டுப்படும்.

ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்.
புண்கள் குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.

ரோஜா குல்கந்து:

ஒருபங்கு ரோஜா பூ இதழ்களின் எடையோடு, இருபங்கு எடை கற்கண்டு சேர்த்துப் பிசைந்து, பசையாக்கி, சிறிதளவு தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைக்க கிடைப்பது ரோஜா குல்கந்து ஆகும்.

காலை, மாலை சுண்டைக்காய் அளவு ரோஜா குல்கந்து சாப்பிட்டுவர, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாகச் சாப்பிட்டுவர இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதியடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here