ஸ்டேட் வங்கி ஏடிம் பணம் எடுப்பு உச்ச வரம்பை பாதியாகக் குறைத்தது ஏன்?
நாட்டின் மிகப்பெரிய தேசியவங்கி பாரத ஸ்டேட் வங்கியாகும். வங்கி அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது ஏடிஎம் கார்டு மூலம் நாளொன்றுக்கு பணம் எடுக்கும் உச்ச வரம்பை ரூ.40,000த்திலிருந்து ரூ.20,000 ஆகக் குறைத்தது. இது அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதற்கான காரணமாக டிஜிட்டல் வர்த்தக நடவடிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே என்று கூறப்பட்டது. ஆனால் நாளுக்குநாள் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் கார்டு பின்நம்பர் திருடப்பட்டதாகவும், தங்கள் கணக்கிலிருந்து பணம் கையாடல் செய்யப்படுவதாகவும் கடும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, “வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் அதிகரித்ததையடுத்து வங்கிகளில் மோசடி நடவடிக்கைகளைக் குறைக்க ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கும் வரம்பை பாதியாகக் குறைக்க முடிவெடுத்துள்ளோம்.மேலும் ரொக்கமற்ற டிஜிட்டல் நடவடிக்கைகளை அதிகரிப்பதும் நோக்கமாகும்” என்று வங்கி தன் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஏடிஎம் மெஷின்களில் ‘ஸ்கிம்மர்கள்’ என்ற ஒரு கருவியைப் பொருத்தி கார்டுகளின் விவரங்களை மோசடிக்கும்பல்கள் திரட்டுகின்றனர்.
ஏடிஎம் கார்டில் உள்ள காந்த ஸ்ட்ரிப்பில் உள்ள் தகவல்களை இதன் மூலம் அவர்கள் திரட்டி விடுகின்றனர். இன்னும் சிலர், ஏடிஎம் எந்திரத்தின் கீ பேடிற்கு மேல் எங்கோ மறைவாக கேமரா ஒன்றையும் வைத்து பின்நம்பரை நாம் அடிக்கும் போது அதன் மூலமும் நம் பின்நம்பரைத் திருடுகின்றனர். இதே விவரங்களைக் கொண்டு நம்முடையதைப் போன்றே ஒரு வங்கி ஏடிஎம் கார்டை திருடர்கள் தயாரித்து ஆன் லைன் ஷாப்பிங், மற்றும் ஏடிஎம்களிலிருந்து பெரிய அளவுக்கு பணத்தை களவாடி வருகின்றனர்.
சில வேளைகளில் கிரிமினல்கள் மெலிதான பிலிம் போன்ற ஒன்றை வைத்து நாம் ஏடிஎம் கீபேடில் அடிக்கும் ஸ்ட்ரோக்குகளை பிடித்து விடுகின்றனர். ஸ்கிம்மர் இருப்பது எப்படி தெரியவரும்: எந்த ஏடிஎம் எந்திரத்தில் இந்த வேலைகள் செய்யப்பட்டுள்ளதோ அந்த ஏடிஎம் எந்திரத்தில் நம் கார்டை ரீட் செய்ய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
மேலும் கீபேர்டின் தன்மை வித்தியாசமாக அமுங்கியோ, அல்லது மேலெழும்பியோ இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஸ்கிம்ம்ர் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை அறிய இன்னொரு அடையாளம் ஏடிஎம் எந்திரத்தில் இருக்கும் கார்ட் ரீடர் தளர்வாக, லூஸ் ஆக இருக்கும். ஏடிஎம் பின்நம்பரை நாம் டைப் செய்யும் போது கீபேடை இன்னொரு கையால் மறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஏடிஎம் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளது என்று தெரிந்தவுடன் உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரியப்படுத்துவது அவசியம். ஆர்பிஐ இது குறித்து எச்சரிக்கை விடுக்கும் போது வங்கிக்கு கார்டு விவரங்கள் திருடப்பட்டதை தெரிவிப்பதில் காலதாமதம் செய்தால் ரிஸ்க், நஷ்டம் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here