பிளஸ் 1 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தேவை : கல்வி அமைப்புகள் வலியுறுத்தல்

‘பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்ணுக்கு முக்கியத் துவம் அளிக்க வேண்டும்’ என, பல்வேறு கல்வி அமைப்பு கள் வலியுறுத்தியுள்ளன. ‘பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண், உயர்கல்விக்கு கணக்கில் எடுக்கப்படும்’ என, ஓராண்டு முன், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. ‘பிளஸ் 1க்கு பொது தேர்வு மட்டும் நடக்கும்; அந்த மதிப்பெண், உயர்கல்விக்கு தேவையில்லை’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.  

இதுகுறித்து, கல்வி அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கை: பிளஸ் 1 பொது தேர்வு நடத்தினாலும், அந்த மதிப்பெண் உயர்கல்விக்கு தேவையில்லை என்ற, அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவித்த நல்ல நோக்கம், இனி நிறைவேறாது. அரசின் திடீர் கொள்கை மாற்றம், தனியார் பள்ளிகளின் அழுத்தத்தால் நேர்ந்துள்ளது. மூன்று ஆண்டுகள் பொது தேர்வு நடத்துவதால், மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது என, அரசு கூறும் காரணம், ஏற்கும் வகையில் இல்லை. 

இந்த அறிவிப்பில், மாணவர்களுக்கு நன்மை செய்யும் நோக்கம் இல்லை. பிளஸ் 1 தேர்வை அறிவித்த ஒரே ஆண்டில், அதை, தன்னிச்சையாக மாற்றுவது, மாணவர்களுக்கு குழப்பத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.பிளஸ் 1க்கு முக்கியத்துவம் இல்லாததால், கல்வித் தரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை, பிளஸ் 1 பொது தேர்வு குறித்து, தமிழக அரசு, ஏற்கனவே வெளியிட்ட அரசாணை எடுத்துக் காட்டியது. தற்போது, புதிய அரசாணையின்படி, முந்தைய அரசாணையில் கூறப்பட்ட மோசமான நிலை, மீண்டும் தொடர்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

மேல்நிலைக் கல்வி என்பது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இணைந்த பாடத்திட்டம். பிளஸ் 1ஐ முழுமையாக படித்தால் மட்டுமே, பிளஸ் 2வில் தரமான கல்வியை பெற முடியும். தமிழக அரசின், பிளஸ் 1 மதிப்பெண்ணுக்கு மதிப்பில்லை என்ற உத்தரவால், இனி, பிளஸ் 1 பாடங்களையே, தனியார் பள்ளிகள் நடத்தாது. பிளஸ் 2வை மட்டும், இரண்டு ஆண்டுகள் படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கல்லுாரியில், பிளஸ் 1 பாடங்களின் அடிப்படை தெரியாமல், உயர்கல்வியில் தோல்வி அடையும் அபாயம் உள்ளது. 

நாடு தழுவிய அளவில், நுழைவு தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில், நம் மாணவர்கள், அதிக தேர்ச்சி பெற முடியாமல் போகும். எனவே, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களையும், உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் எடுக்க வேண்டும். பழைய உத்தரவையே அமல்படுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் உத்தரவுகளை, இனி பிறப்பிக்க கூடாது.இவ்வாறு, கூட்டறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள், பேராசிரியர் பிரபா கல்விமணி, எழுத்தாளர் மாடசாமி, பேராசிரியர்கள் கோச்சடை, ஜோசப் பிரபாகர், பெற்றோர் – ஆசிரியர் சங்க தலைவர் கிள்ளிவளவன் உள்ளிட்ட, 36 பேர், இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here