பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள நூலகங்கள் அனைத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு ஏ.சி.டி. நிறுவனம் இலவசமாக ‘வைபை’ வசதி தர ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 100 நூலகங்கள் பயன்பெறும்.
பகுதி நேர ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் தான் சிறப்பு ஆசிரியர்கள். இவர்கள் தற்போது உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் 16 ஆயிரத்து 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டார்கள். மத்திய அரசு வழங்கிய நிதி மூலம் முதல்கட்டமாக ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. வாரத்திற்கு மூன்று நாட்கள் 2 மணி நேரம் பணி செய்ய அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
சம்பளம் தற்போது ரூ.7,700 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பகுதி நேர பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் விருப்பப்படும் இடங்களுக்கு பணிமாறுதல் பெற சங்கம் மூலம் மனு அளிக்கலாம் என்று அவர்களிடம் தெரிவித்திருக்கிறோம்.
அவர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை. அவர்களை பணியில் அமர்த்தும்போது பணி நிரந்தம் செய்ய வாய்ப்பு இல்லை என்றுதான் 8 ஆண்டுகளுக்கு முன்னர் பணி வழங்கப்பட்டது.
தற்போது உள்ள நிதி நிலையின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை. போராட்டம் செய்யவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது இருக்கும் நிலையை அவர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.
அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் 172 பேர் முன்வந்துள்ளனர். அவர்கள் பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here