எம்.எட்., படிப்பில் முறைகேடு: மாணவர்கள் தில்லுமுல்லு

எம்.எட்., படிப்பில், தனியார் கல்லுாரிகளில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக, பல்கலை கண்டுபிடித்துள்ளது.
பி.எட்., – எம்.எட்., படிப்பில் சேரும் மாணவர்கள், கல்லுாரிகளில் நடக்கும் வகுப்புகளில், தினமும் பங்கேற்க வேண்டும்; பின் தேர்வு எழுதி, சான்றிதழ் பெற வேண்டும். அப்படி பட்டம் பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணியில் முன்னுரிமை தரப்படுகிறது.இரண்டு ஆண்டு காலம்ஆனால், ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கான, இரண்டு ஆண்டு காலத்தை, படிப்புக்கு மட்டும் பயன்படுத்தாமல், பள்ளிகளில் வேலை செய்து கொண்டே, பலர் படிக்கின்றனர். அதனால், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பில் சேருவோர், கல்லுாரிக்கு தினமும் செல்லாமல், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே செல்கின்றனர். இருப்பினும், தினமும் வகுப்புகளில் பங்கேற்றதாக, போலி சான்றிதழ் பெற்று, தனியார் கல்லுாரிகள் வழியாக, தேர்வு எழுதி வந்தனர்.
முறைகேடு
பி.எட்., படிப்பில், இந்த முறைகேடு நடந்ததாக, ஆசிரியர் கல்வியியல் பல்கலை, கடந்த கல்வி ஆண்டில் கண்டுபிடித்தது. இதையடுத்து, மாணவர்களுக்கு, ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு முறை அமலானது.இந்நிலையில், எம்.எட்., படிப்பிலும், இதே தில்லுமுல்லு நடந்திருப்பதை, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை கண்டுபிடித்துள்ளது. எம்.எட்., படிப்புக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, தனியார் சுயநிதி கல்லுாரிகளில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இருந்தும், கடந்த கல்வி ஆண்டில், அதிக கட்டணம் வசூலித்த சுயநிதி கல்லுாரிகளில், எம்.எட்., படிப்பில், காலியிடங்களே இல்லாத அளவுக்கு, அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். குறைந்த கட்டணம் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது.பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மாணவர்கள் இன்றி, இடங்கள் காலியாக இருந்தன. குறைந்த கட்டணத்தில் உள்ள, அரசு கல்லுாரிகளில் சேராமல், தனியார் கல்லுாரிகளில் சேர்ந்தது ஏன் என, பல்கலை நிர்வாகம் விசாரணை நடத்தியது.
தனியார் கல்லுாரிகள்
இதுகுறித்து, பல்கலை துணை வேந்தர் தங்கசாமி உத்தரவில், அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். அதில், தனியார் கல்லுாரிகள் சிலவற்றில், எம்.எட்., படிப்பில் முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. அதாவது, பட்டதாரிகள் பலர், பள்ளிகளில் பணியாற்றிபடி, தனியார் கல்லுாரிகளில் எம்.எட்., சேர்ந்து, வகுப்புக்கு வராமல் இருந்துள்ளனர்.அவர்களுக்கு, தினமும் வகுப்புக்கு வந்தது போல, போலி வருகைப்பதிவு அளித்து, தேர்வு எழுத வைத்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து, சில கல்லுாரிகளுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. விரைவில், அந்த கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. – நமது நிருபர் –
புதிய கட்டுப்பாடு அமல்!
மோசடியை கட்டுப்படுத்த, புதிய கட்டுப்பாட்டை, கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரியிலும், எம்.எட்., படிப்பை நடத்துவதற்கு, குறைந்தபட்சம், 10 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த, 10 பேரின் பட்டியலுடன், அவர்களின் கல்வி சான்றிதழ்களையும், பல்கலையில் தாக்கல் செய்ய வேண்டும்.பின், பல்கலைகளின் அனுமதியை பெற்று, அவர்களை கல்லுாரிகளில் நியமிக்க வேண்டும். அதற்கு பிறகே, மாணவர்களை சேர்க்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியையும், கல்லுாரிகள் பெற வேண்டும் என, பல்கலை பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here