விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் தொடக்கம்

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் 11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகளின் 125 – ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்குகிறது.
 அமெரிக்க நாட்டைக் கண்டுபிடித்த நானூறாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் கண்காட்சி ஒன்று அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 இதில் சர்வசமயப் பேரவை 1893 செப்.11-ஆம் நாள் காலை 10 மணிக்கு தொடங்கியது. உலகின் முக்கியமான பத்து சமயங்களின் பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர்.
 அன்று பிற்பகலில் சுவாமி விவேகானந்தர் இந்திய நாட்டின் பிரதிநிதியாக, இந்து சமயத்தின் பெருமையைப் பற்றிப் பேசினார். அமெரிக்க நாட்டு சகோதரிகளே! சகோதரர்களே என்று அவர் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து உலக சகோதரத்துவ உணர்வு பொங்க அழைத்தபோது, சபையிலிருந்த அனைவரும் அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் சிக்குண்டனர். தங்களை மறந்து கைகளைத் தட்ட ஆரம்பித்தனர். அந்தக் கரவொலி முழுமையாக இரண்டு நிமிடங்கள் நீடித்தது.
 சிகாகோ சொற்பொழிவுகளின் 125-ம் ஆண்டு விழா வரும் செவ்வாய்க்கிழமை (செப். 11) தொடங்கி ஓராண்டுக்கு நடக்க இருக்கிறது. உலகெங்கும் உள்ள ராமகிருஷ்ண மிஷனின் கிளைகள், மிஷனின் வழிகாட்டுதலில் இயங்கிவரும் அமைப்புகள், சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் மீது நம்பிக்கை கொண்ட பல தனியார் அமைப்புகள் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட இருக்கின்றன.
 சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை ( செப்.11) நடைபெறும் விழாவில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், நடிகர் விவேக், அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், கவிஞர் ரமணன், எழுத்தாளர் சந்திர மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் குறித்து பேச இருக்கிறார்கள்.
 பொதுமக்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்ல பொறுப்பாளர் சத்தியஞானந்தர் மகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here