கிரெடிட் கார்டை முறையாகப் பயன்படுத்துவதற்கான 10 வழிமுறைகள்!

பொ துமக்களின் அன்றாட வாழ்க்கையில் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது கிரெடிட் கார்டு. இதன் மூலம் பொருள்களை வாங்கிவிட்டு, குறிப்பிட்ட ஒரு காலக்கெடுவுக்குள் பணத்தைத் திரும்பிச் செலுத்துவது வசதியாக இருப்பதாலும், இ.எம்.ஐ உள்ளிட்ட பல வசதிகள் இருப்பதாலும் கிரெடிட் கார்டுகளைப் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இதை முறையாகப் பயன்படுத்துவது குறித்த வழிமுறைகளை நாம் தெரிந்துகொள்வோமா…

1) கிரெடிட் கார்டுகளை, பல வங்கிகளும் பல நிறுவனங்களும் வழங்குகின்றன. இவை மாறுபட்ட பயன்பாடுகளையும் ரிவார்டுகளையும் கொண்டவையாக இருக்கின்றன. எனவே, எந்த கிரெடிட் கார்டு நம் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்யும் என்பதைத் தெரிந்துகொண்டு வாங்குவது நல்லது. உதாரணமாக, அடிக்கடி வெளியூர்/வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவராக இருந்தால், விமான டிக்கெட்டுகளில் சலுகை, ஹோட்டல் வவுச்சர்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் கார்டுகளை வாங்கலாம்.

2) பெரும்பாலான கிரெடிட் கார்டுகள், முன்பணம் எதுவும் செலுத்தாமல் பொருள்களை வாங்க அனுமதிக்கின்றன. கிரெடிட் லிமிட்டும் அதிகமாகவே வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்மால் எவ்வளவு திரும்பச் செலுத்த முடியுமோ அதற்கேற்ப நாம் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். தகுதிக்கு மீறி செலவு செய்துவிட்டு பில் கட்ட முடியாமல் அவதிப்படக் கூடாது.
3) கிரெடிட் கார்டு பில் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் முழுமையாகச் செலுத்திவிட வேண்டும். பில்லில் மினிமம் தொகையை மட்டும் செலுத்தினால், அது மிக ஆபத்தானது. மீதமுள்ள தொகைக்கு அதிகளவில் வட்டி வசூலிக்கப்படும். அது, கடன் சுமையை மேலும் அதிகப்படுத்திவிடும். இதுதவிர, கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பில் செலுத்தவில்லை என்றால், சில வங்கிகள் ஒவ்வொரு முறையும் தாமதக் கட்டணம் வசூலிக்கும்.
4) கிரெடிட் கார்டின் லிமிட்டைத் தாண்டி (40 சதவிகிதத்துக்கும் அதிகமாக) செலவுசெய்யும் வாடிக்கையாளரை, `அதிகளவில் கடன் வாங்கும் மனநிலையாளர்’ எனக் குறிப்பிடுகின்றன. இதனால், கிரெடிட் ஸ்கோர் குறைந்து எதிர்காலத்தில் கடன் வாங்க முடியாத நிலை உருவாகும். எனவே, கிரெடிட் கார்டு லிமிட்டையும், அதில் செலவிடும் தொகையும் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த நிலை அடிக்கடி ஏற்பட்டால், நிறுவனத்தை அணுகி கார்டின் லிமிட்டை அதிகரித்துக்கொள்வது நல்லது.

5) மனிதத் தவறுகளால் கிரெடிட் கார்டு பில் ரிப்போர்ட்டில் தவறான தகவல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. எனவே, அடிக்கடி ரிப்போர்ட்டை சரிபார்ப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
6) அதிகளவில் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்பதால், 2 அல்லது 3 கார்டு வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், கார்டு திருடுபோகவும் வாய்ப்புள்ளது. தங்களுக்கு ஒரு கிரெடிட் கார்டுக்குமேல் தேவைப்பட்டால் அதிகபட்சம் 3 கார்டுகள் வைத்திருக்கலாம். ஒரு கார்டை அன்றாடத்தேவைக்கும், மற்ற இரண்டு கார்டுகளை அவசரக்காலத்துக்கும் பயன்படுத்துவது நல்லது.
7) பல வங்கிகள் பில்கள், சினிமா டிக்கெட்டுகள், ஹோட்டல் பில்கள் ஆகியவற்றை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால், ரிவார்டு பாயின்ட்களைப் பெறலாம். எனவே, இந்தப் பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் பணத்தைச் சேமிக்க முடியும்.

8) கிரெடிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்தும்போது ரிவார்டு பாயின்ட்கள் கிடைக்கும். இந்த கார்டு பயன்படுத்தும் பலர், இதுகுறித்த விவரம் தெரியாமல் அந்த பாயின்ட்களை முதிர்வடைவதற்குள் பயன்படுத்துவதில்லை. அந்த பாயின்ட்களை, முதிர்வு அடைவதற்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
9) வேலை விஷயமாகவோ, விடுமுறையைக் கழிக்கவோ வெளிநாட்டுக்கு அடிக்கடி சென்றால், குறைந்தப் பரிவர்த்தனை கட்டணம் கொண்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது நல்லது. வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும் அங்கு பொருள்கள் வாங்கும்போதும் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்காத டிராவலிங் கார்டுகளை எடுத்துச்செல்வது நல்லது. மேலும், வெளிநாட்டு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை, தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

10) மோசடிகள் அதிகளவில் நடப்பதால், கிரெடிட் கார்டுகளைப் பாதுகாக்க, பின் நம்பர் மற்றும் புதிய வகை சிப் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் பின் நம்பர் மூலமாகவே நடக்கும். கார்டும் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தால், கிரெடிட் கார்டு உங்களுக்கான கற்பகவிருட்சமாக இருக்கும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here